(வி - ரை.) அஞ்சல் - அஞ்சாரே
என்னும் பொருள் தரும் அல்லீற்று வியங்கோள். இஃது
உடன்பாட்டினும் எதிர்மறையினும் வரும்.
1‘பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்’
எனவரும் திருக்குறளில், அவ்விரண்டும்
முறையே எதிர்மறை, உடன்பாடாக வந்தன காண்க.
மட அனம் இளமைச்செவ்வியும் அழகும்
மிக்க அன்னம் என, அதன் உயர்ந்த அழகில்
கவர்ச்சிதருதலைக் கூறியவாறாம். அணி, மணி என்பன,
அழகு என்னும் பொருள்தந்து நின்றன. ‘களிவண்டு
மாணப்பிடித்த தார்மன் ’ என்பது, அரசன்
தண்ணளியுடையான் என்பதைக் குறிப்பாக் காட்டிய
குறிப்புச்சொல் (27)
அன்னம் அச்சம் நீங்கல்
35. செய்ய கமலத் திருவை நிகரான
தையல் பிடித்த தனியன்னம் - வெய்ய
அடுமாற்றம் இல்லா அரசன்சொல் கேட்டுத்
தடுமாற்றம் தீர்ந்ததே தான்.
(இ - ள்.) செய்ய கமல திருவை நிகர்
ஆன - செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற
திருமகளைப்போன்றவளான, தையல் பிடித்த தனி
அன்னம் - சேடிப்பெண் பிடித்துக்கொண்டு வந்த
ஒப்பற்ற அழகுடைய அன்னப்பறவை, வெய்ய அடு மாற்றம்
இல்லா - கொடுமையான கொல்லுதல் தன்மையில்லா
மாறுபாடற்ற, அரசன் சொல்கேட்டு - நள மன்னனின்
(இனிய) சொற்களைக்கேட்டு, தடுமாற்றம்
தீர்ந்தது-மனக்கலக்கம் தீர்ந்தது.
(க - து.) அன்னம், நளனுடைய இனிய
சொற்களைக் கேட்டு அச்சம் நீங்கியிருந்தது
என்பதாம்.
(வி - ரை.) செய்ய - செம்மையென்னும்
பண்படியாகப் பிறந்த பெயரெச்சம். கமல திரு -
தாமரைமலரில் வாழ்கின்ற திருமகள். அழகும்
இளமையும் மிக்க பெண்டிர்க்குத் திருமகளை
உவமங்கூறுதல் தமிழ்ச்சான்றோர் மரபு. ஆதலால், ‘
திருவை நிகரான தையல்’ என்றார்.
1. திருக் : 196.
|