பக்கம் எண் :

40நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

1‘திருவினும் நல்லாள் மனைக்கிழத்தி யேனும்’

என்று குமரகுருபர அடிகளார் நீதிநெறி விளக்கத்தில் கூறுவதுங் காண்க. அடுமாற்றம் - அடுதற்கான மாறுபாடு: கொல்லத்தக்க பகைமை. இல்லா - இல்லாத என்னும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். தடுமாற்றம்: தொழிற்பெயர் ; ஒரே சொல். ஏயும் தானும் அசைச் சொற்கள். (28)

அன்னம், நளனுக்குத் தமயந்தியைப்பற்றிக் கூறல்

36. திசைமுகந்த வெண்கவிகைத் தேர்வேந்தே உன்றன்
இசைமுகந்த தோளுக் கிசைவாள் - வசையில்
தமையந்தி என்றோதும் தையலாள் மென்தோள்
அமையந்தி என்றோர் அணங்கு.

(இ - ள்.) திசை முகந்த வெண் கவிகை தேர் வேந்தே - எட்டுத் திக்குகளிலும் பரவிய வெண்கொற்றக் குடையையுடைய தேரினையுடைய மன்னனே ! உன்தன் இசைமுகந்த தோளுக்கு - உன்னுடைய புகழ்மிக்க தோள்களுக்கு, மென்தோள் அமை அந்தி என்று ஓர் அணங்கு - மெல்லிய தோள்களாகிய மூங்கில் அழகி என்னும் ஒப்பற்ற தெய்வமகளாகிய, வசை இல் தமையந்தி என்று ஓதும் தையலாள்- குற்றமற்ற தமயந்தி என்று பெயர் கூறப்படுகின்ற ஒருத்தி, இசைவாள் - பொருத்தமுடையவளாவாள்.

(க - து.) அன்னம் நளனைப்பார்த்து, ‘வேந்தே ! உன் இசைமுகந்த தோளுக்கு மூங்கில்போன்ற தோளுடைய தமயந்தியே ஏற்றவளாவாள்,’ என்றது.

(வி - ரை.) நளமன்னன், திசைமுகந்த தோளழகன், தமயந்தி மூங்கில்போன்ற தோள் அழகினாள் ; இருவருக்குமே மணம் பொருத்தமாகும் என்றபடி. திருமணத்துக்கு நாட்குறிக்கும் முன், ஆட்பொருத்தம் பார்த்தல்வேண்டும் ஆகையால், தோட்பொருத்தம் கூறினார்.

திசை முகத்தல் - திக்குகளைத் தன்னிடத்தடக்குதல். நளமன்னன் தன் ஆட்சிமுறையினால் எங்கும் புகழ் மணக்க இருந்து ஆண்டான் என்பது குறிப்பு. கவிகை - கவித்தலையுடைய தென்னும் பொருட்டாய் ஈண்டுக் குடையைக் குறித்தது. நிலை, புதையல், படை என்பனபோல.

1. நீதிநெறி : 80.