பக்கம் எண் :

மூலமும் உரையும்41

தமையந்தி : ஐகாரம் இடைப்போலி ; எதுகை நோக்கி வந்தது. அணங்கு: அணங்குபோல்வாளாகிய தமயந்தி என விரித்துப் பொருள்கொள்ளக்கிடத்தலால் உவமவாகு பெயர். அந்தி - அந்தத்தை (அழகை) உடையாள். அந்தம் - அழகு. அதனையுடையாள் அந்தி யெனப்பட்டாள். (29)

‘ தமயந்தி, யார் மகள் ?’ என்று நளன்
அன்னத்தை வினவல்

37. அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்குக்
கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச் - சொன்னமயில்
ஆர்மடந்தை என்றான் அனங்கன் சிலைவளைப்ப
பார்மடந்தை கோமான் பதைத்து.

(இ - ள்.) அன்னம் மொழிந்த மொழி புகாமுன் - அன்னப் பறவை எடுத்துக்கூறிய அச்சொல் தன் செவியில் நன்கு நுழையும் முன்பே, மனக்கோயில் கன்னிபுக்கு கைக்கொள்ள - தன் மனமாகிய கோவிலுக்குள் தமயந்தி சென்று (அதைத்) தனக் குரிமையாக்கிக் கொண்டதனால், அனங்கன் சிலைவளைப்ப - மன்மதன் தன் கரும்புவில்லை வளைத்து அம்பு தொடுத்தெய்ய, பார்மடந்தை கோமான் பதைத்து - நிலமகளுக்குத் தலைவனான நளன் துடிதுடித்து (காதலால் மயக்குற்று), சொன்னமயில் ஆர் மடந்தை என்றான் - நீ கூறிய மயிலனையாள் யார் பெற்ற மகளென்று வினாவினான்.

(க - து.) அன்னஞ் சொன்னசொல் தன் காதில் படுமுன் ‘அவள் யார் மகள் ?’ என்று நளன் அன்னத்தைக் கேட்டான் என்பதாம்.

(வி - ரை.) புகா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். அனங்கன் - உடலற்றோன்: மன்மதன். சிலைவளைப்ப - ஈண்டுக் காரியப்பொருட்டாய்வந்த செயவெனெச்சமாதலால், ‘வில்லை வளைத்து அம்பு தொடுத்தெய்ய’ என்று பொருள் கூறப்பட்டது. மயில்போன்ற சாயலுடையாளை மயிலென்றது ஆகுபெயர். கன்னி - கட்டழகுடையவள். பார்மடந்தை கோமான் - நிலமகளுக்கு முதல்வனானவன். இக்கன்னிக்காகப் பதைத்து நின்றான் என்னும் நயம் தோன்றநின்றது. ஆர் - யார் என்பதன் மரூஉ. யானை - ஆனை ; யாறு - ஆறு ; யாடு - ஆடு என்பன போலக் கொள்க. (30)