|
வாழவே விரும்புவர்; அவர் வழி உலகமும் நிகழும்;
அத்தகையாரை எல்லோரும் போற்றுவர்; போற்றத்தக்க
சிறப்புமிக்கார்க்குத் தவறிழைத்தல் எவ்வளவு
கீழ்மையானது; கேடானது என,
அதை உட்கொண்டு ‘வண்தமிழ் வாணர்ப்பிழைத்த
வான்குடி போல்’ என்னும் உவமை கொடுத்துக் கூறினார்.
பெரியாருக்குப் பிழைசெய்தார் கெடுவர் என்பதை வள்ளுவரும்,
1‘ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்’
என்பதுங் காண்க. அக்குடிமக்கள் நொந்தழுவதுபோல்,
தமயந்தியும் நொந்து அழுது வருந்தினாள் என்க. மண்டுதல்
நெருங்குதல். அவ்வனத்தில் வெப்பமே குடிகொண்டிருப்பதெனப்
பாலையின் கொடிய தன்மைக்கு ‘மண்டு கொடும் சுரம்’
என, அடைகள் கொடுத்துரைத்தார். தன் கணவனாகிய
நளன், தன்னைக் கொடுங்கானில் தன்னந்தனியாக
இரவில் விட்டுவிட்டுப் போயும் தற்காத்துத் தற்கொண்டான்
பேணித் தகைசான்ற சொற்காக்கும் கற்புடையாளாகலான்,
தன் தலைவிதிதான் தன் கணவன் மனம் வேறுபடுதற்குக்
காரணமென எண்ணி வருந்தினாளென
‘மன் இழைத்த தாழ்வெல்லாம் தன்தலைமேல் தந்து’
என்று கூறி உணர்த்தினார். (133)
வணிகன் ஒருவன், தமயந்தியைக் காண்டல்
312. அவ்வளவில் ஆதிப் பெருவழியில் ஆய்வணிகன்
இவ்வளவு தீவினையேன் என்பாள்தன் - மெய்வடிவைக்
கண்டான்ஐ யுற்றான் கமலமயி லேயென்றான்
உண்டாய எல்லாம் உணர்ந்து.
(இ - ள்.) அவ்வளவில் - அந்த வேளையில்,
ஆதிபெரு வழியில் ஆய்வணிகன் - (சேதிநகர்க்குச் செல்லுகின்ற) பழைய
காலத்துப் பெரிய பாதையிடத்தே (வந்த) எதையும் நன்கு
ஆராய்கின்ற வணிகனொருவன், இவ்வளவு தீவினையேன்
என்பாள்தன் - ‘எண்ணிறந்த கேட்டுக்கு ஆளானவளாகிய
நான்’ என்று சொல்லி வருந்திக்கொண்டிருக்கின்ற
தமயந்தியின், மெய்வடிவை கண்டான் ஐஉற்றான் -
உடலழகைப் பார்த்தான் (இவ்வளவு அழகு வாய்ந்தவள் யார்?
தனியேவரக் கரணமென்ன? எனப் பலவாறான) ஐயத்தைக்
கொண்டான், உண்டு ஆய எல்லாம் உணர்ந்து - (அவளுக்கு
நிகழ்ந்த காரணத்தைத்
1. திருக்குறள் : 899.
|