|
தன்னந்தனியாக இக்காட்டில்)
வருவதற்குரிய செயலைக் கேட்டறிய எண்ணி இவள்,
கமலமயிலே என்றான் - செந்தாமரை மலரில்
இருக்கின்ற திருமகளே என்று தனக்குள் நினைந்தான்.
(க - து.) இவ்வாறு தமயந்தி, ‘கொடுந்தீவினையாட்டியேன்’
என்று கூறி வருந்திக்கொண்டிருக்கின்றபோது, சேதிநகர்க்குச்
செல்லும் பழைய காலத்துப் பாதையிடத்தே வந்த வணிகன் ஒருவன்,
இவளைக்கண்டு வியந்து இவள் வரலாற்றை அறிய எண்ணிக்கொண்டு ‘இவள்
திருமகளாகவே இருக்கலா’மெனக் கருதினான் என்பதாம்.
(வி - ரை.) அ அளவு - அந்த அளவு என்னும்
வரையறைப் பண்புப்பெயர் ஈண்டுக் காலத்தைக் குறித்தது,
இலக்கணை வழக்கு; வழுவமைதி. ஆதிப்பெருவழி - பண்டைக்
காலமுதல் இருந்துவருகின்ற பெரியசாலைப் பாட்டை. அது
சேதி நகர்க்குச் செல்வது. கண்டான் : முற்றெச்சமாகக் கொள்க.
ஐயுறுதல் இவள் நீரரமகளோ வானுலக மங்கையோ என, அவள்தன்
உடலொளி அழகுகண்டு பல்லாற்றானும் ஐயங்கொள்ளல்.
1‘போதோ விசும்போ புனலோ பணிகள் அதுபதியோ
யாதோ அறிகுவது ஏதுமரிது’
எனத், திருக்கோவையார்த் தலைவன்,
தலைவியைக் கண்ட ஞான்றை அவளை இன்னாளென அறியாது
அவள் அழகான் மயங்கி ஐயுற்றமைபோல் என்க. உண்டாய
எல்லாம் உணர எனற்பாலதான செயவெனெச்ச
ஈறு எதிர்காலங்குறிப்பது, உணர்ந்து எனத் திரிந்தது.
2’ ....................... ஊர்துயில் எடுப்பி
இரவுத்தலைப் பெயரும் வைகறை’
என்னும் சிலப்பதிகாரச் செய்யுளடியில்
எடுப்ப எனற்பாலது எடுப்பி என வந்ததுபோற் கொள்க. ‘பெருவழியில்’, ‘ஐயுற்றான்’
‘உணர்ந்து’ முதலிய சொற்கட்கேற்ற தொடர்புடைய
சொற்கள் இசையெச்சமாக வருவித்துப் பொருளுரைக்கப்
பெற்றன. ‘கமல மயிலே என்றான்’ என்பது, ஒருகால் திருமகளாகவே
இருக்கலாம் என்று தானே தனக்குள் சொல்லிக்கொண்டான்
என்க. ஏகாரம் ஈண்டு ஐயப்பொருட்டாகவும் தெளிவுப்
பொருட்டாகவும் இருபெரு நயமும் பொருட்செறிவும்
கொள்ள அமைந்தமை காண்க. (134)
1. திருக்கோவையார் : 2. 2. சிலப், 4 :
79-80.
|