|
வணிகன், தமயந்தியை நீ யாரென
வினாவல்
313. எக்குலத்தாய் யார்மடந்தை யாதுன்னூர்
யாதுன்பேர்
நெக்குருகி நீயழுதற் சென்னிமித்தம் - மைக்குழலாய்
கட்டுரைத்துக் காணென்றான் கார்வண்டு காந்தாரம்
விட்டுரைக்கும் தார்வணிகர் வேந்து.
(இ - ள்.) கார்வண்டு - கருநிற வண்டினங்கள்,
காந்தாரம் விட்டு உரைக்கும் தார்வணிகர் வேந்து -
காந்தாரம் என்னும் இனிய பண்ணிசையை வாயாற் பாடி
முழங்குகின்ற மலர்மாலையணிந்த வணிகத் தலைவன், (தமயந்தியை
நோக்கி) எக்குலத்தாய் யார்மடந்தை - (நீ) எந்தக்குலத்தில்
பிறந்தவள் ? யாருடைய புதல்வி ?, உன் ஊர்யாது உன் பேர்யாது -
உன்னுடைய ஊர் எது ? உன் பெயர் என்ன ?, நெக்கு உருகி
நீ அழுதற்கு நிமித்தம் என் - நீ மனங்கசிந்து அழுதற்குரிய
காரணம் என்ன ?
மைகுழ லாய் கட்டு உரைத்து காண் என்றான் - கருங்கூந்தலையுடையாய் !
நீ இவைகளையெல்லாம் நன்கு
விளக்கிச் சொல்வாயாக என்று வினவினான்.
(க - து.) அவ்வணிகன் தமயந்தியை நோக்கி, ‘உன்
குலமென்ன? ஊர் யாது? பேர் யாது? உன்னைப் பெற்றோர்
யாவர்? மனங்கரைந்து அழுதற்குரிய காரணமென்ன? இவைகளை விளக்கிக் கூறுக’
என்று கேட்டன் என்பதாம்.
(வி - ரை.) வணிகனானவன், முதலிற் குலத்தையும்,
பின்னர் அவள் பெற்றோரையும், அப்பால் ஊரையும், பின் பெயரையும்,
பின்பு இவ்வாறான துன்பநிலை யெய்துதற்குரிய காரணத்தையும்
படிப்படியாக முறையாக வினாவினான் என்பதை வரிசையாக ‘எக்குலத்தாய்.............கட்டுரைத்துக்காண்’
என்று அமைத்துக் கூறினார். கட்டு உரைத்தல் - தெளிவாக
அமையக் கூறுதல். கட்டுரை - பொருள் பொதிந்த சொல்.
காந்தாரம் - ஒருவகைப் பண். விட்டு உரைத்தல் - விட்டு
விட்டுப் பாடுதல். வண்டுகள் பாடுங்கால் சில பாடுதலும், சில
நிறுத்தலும் ஆகிய விட்டு விட்டுப் பாடுதலைக் காண்கின்றோமாதலின்,
மலர் மாலையிலுள்ள தேனுண்ண மொய்த்துக்கொண்டிருக்கின்ற
வண்டுகள், இவ்வாறு பாடுகின்றன என, வணிகன் மாலைச்
சிறப்புக் கூறுமுகத்தால், அவன் அஃறிணை உயிர்களுக்கும்
ஆதரவளிக்கும் நீர்மையன், வேடன் போன்ற தீய
செயலுடையான் அல்லன் என்பதைக் குறிப்பாலுணர்த்தற்கும்,
தமயந்திக்கு இவனால் யாதொரு
|