|
ஊறும் நிகழாது,’ நலமே நிகழும் என்பதைத்
தெளிவுபடுத்தற்கும் ‘தார் வணிகர் வேந்து’ என்று
அடைமொழி புணர்த்துக் கூறினார். வண்டு - வண்டுக் கூட்டம்.
இங்கு ஒருமைச்சொல், சாதியொருமை. (135)
வணிகன் வினாவிற்குத் தமயந்தி விடை
கூறுதல்
314. முன்னை வினையின் வலியான் முடிமன்னன்
என்னைப் பிரிய இருங்கானில் - அன்னவனைக்
காணா தழுகின்றேன் என்றாள் கதிரிமைக்கும்
பூணாரம் பூண்டாள் புலர்ந்து.
(இ - ள்.) கதிர் இமைக்கும் பூண் ஆரம் பூண்டாள் -
ஒளி விட்டெறிக்கின்ற அணிகளும் மணி மாலைகளும்
அணிந்த தமயந்தியானவள், புலர்ந்து
- வாட்டமடைந்து, முன்னை வினையின் வலியான் - நான்
முற்பிறப்பிற் செய்த தீவினையின் வலிமையினால்,
முடிமன்னன் என்னை இருங்கானில் பிரிய - முடியணிந்த
வேந்தனான நளன் என்னை இப்பெருங் காட்டில் (தனியே
விட்டு விட்டுப்) பிரிந்து செல்ல, அன்னவனைக் காணாது
அழுகின்றேன் என்றாள் - அம் மன்னவனைக் காணாமல்
(தேடி) அழுது கொண்டிருக்கின்றேன் என்று தமயந்தி கூறினாள்.
(க - து.) வணிகன் கேட்டதற்குத் தமயந்தியானவள், ‘நான்
செய்த தீவினைப் பயனால் வேந்தன் இப் பெரிய காட்டில்
என்னை விட்டுவிட்டுச் செல்ல, அவ்வேந்தனைக் காணாமல்
தேடி அழுகின்றே’னென்று வாட்டங்கொண்டு கூறினாள்
என்பதாம்.
(வி - ரை.) முன்னைவினை - முற்பிறப்பில் செய்யப்பட்ட
தீவினை. ஒருவர் நல்வினையோ தீவினையோ செய்தால் அவருக்கு
அவ்
வினை பிற்பிறப்பில் வந்து அதன் பயனைச் செய்தே
தீரும் என்பது ஆன்றோர் ஆய்ந்து கண்ட முடிபு.
1‘ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாக’
என்றார் இளங்கோவடிகளும்,
வள்ளுவரும் தம் மறைநூலில்,
1. சிலப், பதிகம் : 57-8.
|