பக்கம் எண் :

மூலமும் உரையும்395

1‘தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று’

என்றருளியதும் அறிக. இம் முறையில், தமயந்தியாளவள் தன்னை இக் கொடுங் காட்டில், அதிலும் நள்ளிரவில், ஒர் பாழ் மண்டபத்தில் தன்னந் தனியளாக விட்டுச் செல்வதென்னின், தன் கணவரென்ன தன்பால் அன்பற்றவரா? அல்லது அறிவு திருந்தாதவரா? தன்னைப் பிரிந்தால்
அப் பிரிந்த நாளைப் ‘பதடிவைகல்’ எனக் கருதும் பான்மையரன்றோ? என்னுங் கருத்துக் கொண்டவளாய் அரசன்மீது பழிச்சொற் கூறாது
‘முன்னை வினையின் ............மன்னன் பிரிய’ என்றாள். அன்னவன்-அத்தகைய சிறப்பு வாய்ந்தவன் ; அவனைக் காணாமல் தேடி எய்த்து அழுகின்றேனென்று தமயந்தி அவ் வணிகனுக்குச் சுருங்கிய முறையில் கூறினாள். அவன் கேட்டன ‘எக்குலத்தாய் யார் மடந்தை யாதுன்பேர்’ என்பன முதலாகப் பல் கேள்விகள். தமயந்தி, அவையெல்லாம் எற்றுக்குக்கூற வெனக் கருத்துட்கொண்டு ‘என்னைப் பிரியக் காணாதழுகின்றேன்’ என, மற்றொன்று விரிக்காது உற்றதை ஒளிக்கா துரைத்தமை அறிக. (136)

வணிகன், தமயந்திக்குச் சேதி நகர்க்குச் செல்ல வழிகாட்டுதல்

315. சேதி நகர்க்கே திருவைச் செலவிட்டப்
போதிற் கொடைவணிகன் போயினான் - நீதி
கிடத்துவான் மன்னவர்தம் கீர்த்தியினைப் பார்மேல்
நடத்துவான் வட்டை நடந்து.

(இ - ள்.) நீதி கிடத்துவான் - ஒழுக்கத்தைத் தன்பாற் கொண்டவனும், மன்னவர்தம் கீர்த்தியினை பார்மேல் நடத்துவான் - அரசர்களின் புகழை இந்நிலவுலகத்தில் பரந்து நிற்குமாறு செய்பவனுமாகிய, கொடை வணிகன் - கொடைத் தொழிலையுடையவனுமாகிய அவ்வணிகன், சேதி நகர்க்கே திருவை செலவிட்டு - சேதிநாட்டுத் தலைநகருக்குத் திருமகள் போன்ற தமயந்தியைச் செல்லுமாறு போக அனுப்பிவிட்டு, அப்போது வட்டை நடந்து போயினான் - பின்பு தன் வணிகமுறை கருதி வழி கடந்து சென்றான்.

(க - து.) தமயந்தியை அவ்வணிகன் சேதி நகருக்குச் செல்லும்படி அனுப்பிவிட்டு, அப்பால் தன் வணிக முறை கருதி வழி நடந்து சென்றான் என்பதாம்.

1. திருக்குறள் : 208.