பக்கம் எண் :

மூலமும் உரையும்397

முரண்தொடை அழகு பொலிந்திருத்தலை நோக்குக. உற்றதுயர் -நிலைபெற்றிருக்கும் வருத்தம். அன்றித் தன்பால் வந்துள்ள வருத்தம் என்னலுமாம். மற்று - அசைநிலை, நின்றாள் : இறந்த கால வினையாலணையும் பெயர். கண்டேம் : உளப்பாட்டுத் தன்மைப்பன்மை வினைமுற்று. பல சேடியர் கண்டனராகலின் இவ்வாறு கூறினாரென்க. (138)

சேதியரசி தன் பணிப் பெண்களை நோக்கி,
‘அவளை அழைத்துவருக’ எனல்

317. யோகலா முன்னம் புனையிழையாய் பூங்குயிலை
ஆய மயிலை அறியவே - நீயேகிக்
கொண்டுவா என்றாள்தன் கொவ்வைக் கனிதிறந்து
வண்டுவாழ் கூந்தல் மயில்.

(இ - ள்.) வண்டு வாழ் கூந்தல் மயில் - வண்டுகள் (மலர்த் தேனை உண்பதற்குத்) தங்கியிருக்கின்ற கூந்தலையுடைய மயில் போன்ற சேதியரசியானவள், தன் கொவ்வைக் கனிதிறந்து - தன்னுடைய சேவைக்கனிபோன்ற செவ்வாய் திறந்து, புனை இழையாய் - அணிந்துள்ள நகைகளையுடைய சேடியே!, பூங்குயிலை ஆய மயிலை - (நீவிர் கூறிய) அழகிய குயில் போன்றாளைச் சிறந்த மயிலனையாளை, அறிய - (இன்னாளெனக் கேட்டுத்) தெரிந்துகொள்ளற்கு, போய் அகலா முன்னம் - அவள் அவ்விடத்தைவிட்டுச் செல்வதற்கு முன்பாக, நீ ஏகி - நீ சென்று, கொண்டுவா என்றாள் - அழைத்து கொண்டுவருக என்று (அவர்களுள் ஒரு சேடியைப் பார்த்துக்) கூறினாள்.

(க - து.) தமயந்தியின் தன்மையைக் கூறிய சேடியருள் ஒருத்தியைச் சேதியரசி நோக்கி, ‘சேடியே ! நீவிர் கூறிய அவள் அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுமுன் இங்கே அழைத்துக் கொண்டுவா’ என்று கட்டணை இட்டாள் என்பதாம்.

(வி - ரை.) ‘போய் அகலா முன்னம்’ என்பது, ‘அவள் அந்த இடத்தினின்றும் அகன்று செல்வதற்கு முன்பாக விரைவில் அழைத்து வருக’ என்னும் குறிப்பினை யுடையது. புனை இழையாய் : வினைத்தொகை. பூகுயில் ஆயமயில் என்பன ஆகு பெயராகத் தமயந்தியைக் குறித்தன. குயிலென்றமையால் குயிற் குரல்போன்ற அவள் மென்சொல்லால் அவள் வரலாறு