பக்கம் எண் :

398நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

கேட்டுத் தெளியலாமென்றும், மயில் என்றமையால் அவள் சாயல் முதலிய அழகினைக் கண்ணாற் காணலாமென்றும் அவள் கருதினாளெனக் கொள்க. வந்து கூறினார் பலராயினும் தன் பக்கலில் எப்போதும் இருக்கும் சேடி, மற்றையோரினும் அறிவும் குறிப்பறியும் தன்மையும் அழகும் மிக்கவளாக இருப்பா ளாகலான், ‘புனை இழையாய் நீ ஏகி......கொண்டுவா’ எனக் கூறினாள். கொவ்வைக் கனி : உவமை ஆகுபெயராய்ச் சேதியரசியின் சிவந்த வாயைக் குறித்தது. அவள் தன் இளமைப் பண்பும், அழகின் செவ்வியும் தோன்றக் ‘கொவ்வைக் கனிதிறந்து’ என்றார். (139)

தமயந்தி, சேதியரசியின் கால்களில் விழுந்தழுதல்

318. ஆங்கவளும் ஏக அரசன் பெருந்தேவி
பூங்கழலின் மீதே புரண்டழுதாள் - தாங்கும்
இனவளையாய் உற்றதுயர் எல்லாம் எனது
வினைவலிகாண் என்றாள் மெலிந்து.

(இ - ள்.) ஆங்கு அவளும் ஏக - (தமயந்தியானவள்) அவ்விடத்தே சேதியரசிபால் சென்று, மெலிந்து - வருத்தத்துடன், தாங்கும் இனவளையாய் - பலவகை வளையல்களை அணிந்துள்ள சேதியரசியே, உற்ற துயர் எல்லாம் - நான் அடைந்த துன்பம் யாவும், எனது வினைவலி என்றாள் - என்னுடைய ஊழின் கோட்பாடே என்று கூறி, அரசன் பெருந்தேவி - சேதியரசன் பட்டத்தரசியின், பூங்கழலின்மீதே புரண்டு அழுதாள் - திருவடிகளின்மேல் வீழ்ந்து அழுவாளாயினாள்.

(க - து.) தமயந்தி, சேதியரசியின்பாற் சென்று ‘நான் அடைந்த துன்பமெல்லாம், எனது ஊழின் வலிமையே’ என்று கூறி அவள் காலடிகளில் விழுந்து புரண்டழுதாள் என்பதாம்.

(வி - ரை.) அவள் : சுட்டுப் பெயர்; ஈண்டுத் தமயந்தி. ஏக - ஏகி என்னும் பொருளது. ஏக என்னும் செயவெனெச்சம் அழுதாள் என்ற இறந்தகால வினைமுற்றினால், இறந்தகாலமாக வந்தது. காரியப்பொருட் டாதலினால். பெருந்தேவி - முதன் மனைவி. அரசர்கட்கு மனைவியர் பலருளராதலின், பட்டத்தரசியென்பதை உணர்த்துதற்குப் ‘பெருந்தேவி’ என்றார்.

இன்துணை மகளிர்க்கு இன்றியமையாக் கற்புக்கடன் பூண்டவள் தமயந்தியாகலான், அவள் தன் மணாளனாகிய நள