பக்கம் எண் :

400நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

கைக் கண்டு வியந்த சேதியரசி, இவள் திருமகளோவென்று ஐயங்கொண்டு நின்றாள். பின்னர் அவள் துன்பநிலை கண்டு வருந்தினாள். தமயந்தியை நோக்கி உள்ளதை உள்ளவாறே மறைக்காமல் கூறுக என்பாளாய் ‘உள்ளவாறெல்லாம் உரை’ என்றாள். சிந்து+ஆகுலம்=சிந்தாகுலம். சிந்து - கடல். ஆகுலம் - வருத்தம், கடல்போன்று பெருகிய துன்பம் என்க. உவமைத் தொகை. இவளைக் கண்டதும் சேதியரசியின் பெண்மையுள்ளம் உருகிற்று; அதனால் எனக்கு இத்துன்பம் உன்னைக் கண்டதும் மிகுந்தது; உன் வரலாறு தெரிந்தால் உன் துன்பம் தீர வழி செய்வேன் என்றும், அதனால் எனக்கு இத்துன்பம் உன்னைக் கண்டதும் மிகுந்தது; உன் வரலாறு தெரிந்தால் உன் துன்பம் தீர வழி செய்வேன் என்றும், அதனால் நீ நன்னிலை யெய்தி இன்புறச் செய்வேனென்றும் உணர்த்தும் குறிப்பினளாய் ‘சிந்தாகுலம் எனக்குத் தீராது......உள்ளவாறெல்லாம் உரை’ என்றாளென்க.

சேதியரசிக்குத் தமயந்தி விடையளித்தல்

320. என்னைத் தனிவனத்திட் டெங்கோன் பிரிந்தேக
அன்னவனைக் காணா தலமருவேன் - இந்நகர்க்கே
வந்தேன் இதுவென் வரவென்றாள் வாய்புலராச்
செந்தேன் மொழிபதறாச் சேர்ந்து.

(இ - ள்.) (இவ்வாறு கேட்ட சேதியரசியைத் தமயந்தி நோக்கி) வாய்புலரா செம்தேன் மொழி பதறா சேர்ந்து - வாய் புலர்ந்து இனிமையான தேன்போன்ற சொற்கள் தடுமாறி ஒன்றுபட்டு, என்னை தனி வனத்து இட்டு எம்கோன் பிரிந்து ஏக - என்னைத் தன்னந் தனியாக வனத்திடத்து விட்டுவிட்டு எம் கணவன் பிரிந்து செல்ல, அன்னவனைக் காணது அலமருவேன் - அத்தகைய என் கணவரைக் காணாமல் தேடி அலைவேனாயிருக்கின்றேன், இந்நகர்க்கு வந்தேன் - (அவரைத் தேடிவரும்போது தற்செயலாக) இந்த நகருக்கு வந்து சேர்ந்தேன், இது என் வரவு என்றாள் - இதுதான் நான் இங்கே வருவதற்குரிய காரணமாகும்.

(க - து.) சேதியரசிக்குத் தமயந்தியானவள், ‘என் கணவர் என்னைத் தனியே வனத்தில் விட்டுச் செல்ல அவரைத் தேடி அலைவேனாவேன்; தற்செயலாக இந்த நகருக்கு வந்து சேர்ந்தேன் ; இதுவே என் வருகை’ யென்று கூறினாள் என்பதாம்.

(வி - ரை.) என்னை - தமயந்தி தன்னைக் குறிக்கும் தன்மை யொருமைச்சொல். எம் கோன் - எம் தலைவன், அல்லது அரசன்,