|
(வி - ரை.) ஒரு வகையால் -
ஒருவாற்றால், எவ்வழியாலும் என்ற குறிப்பு. தந்துவிடுதல் -
கொண்டுவந்து சேர்த்தல். விடு: பகுதிப்பொருள் விகுதி.
தாழ் குழலாய் : வினைத்தொகை. தமயந்திக்கு ஆய் விளி
ஏற்றது. ஏந்திழை : அன்மொழித்தொகை. இனிது இருத்தல்-உண்டு
உடுத்துத் தன்னைப்போல் கவலையின்றி இருத்தல். கொங்கு -
மணம். தார் -
மாலை. சேதிநாட்டரசி தமயந்தியை இன்னாளென அறியாளாயினும்
அவள் தோற்றம் நல்லியல்பு முதலியனகொண்டு இவள்
உயர்குடிப் பிறந்த பெண் மகள் எனக் கருதி ‘என்றனுடன்
இங்கே இருக்க இனிது’
என வேண்டினாள் என்க. (143)
வீம மன்னன், நளனையும் தமயந்தியையும்
தேடுதற்கு ஆளனுப்புதல்
322. ஈங்கிவளிவ் வாறிருப்ப இன்னலுழந் தேயேகிப்
பூங்குயிலும் போர்வேல் புரவலனும் - யாங்குற்றார்
சென்றுணர்தி என்று செலவிட்டான் வேதியனைக்
குன்றுறழ்தோள் வீமன் குறித்து.
(இ - ள்.) ஈங்கு இவள் இவ்வாறு இருப்ப
- இந்தச்சேதி நகரில் சேதியரசி வேண்டியவாறு தமயந்தி
இப்படி இருந்துவர, குன்று உறழ்
தோள் வீமன் - மலையையொத்த உயர்ந்த தோள்களையுடைய
வீமமன்னனானவன், பூங்குயிலும் போர்வேல் புரவலனும் -
அழகிய குயில்போன்ற இன்சொல்லுடைய தமயந்தியும் போர் புரிகின்ற
வேலேந்திய நளமன்னனும், இன்னல் உழந்து ஏகி யாங்கு
உற்றார் - துன்பமடைந்து சென்று எங்கு இருக்கின்றனரோ
(அறிகிலோம் என்று கருதி), வேதியனை - மறையவன் ஒருவனை,
சென்று உணர்தி என்று குறித்து செ(ல்)லவிட்டான் - நீ
போய்த்தேடி (நளன் தமயந்தி இருவரும் இருக்கும் இடத்தை)
அறிந்து வருகவென்று எடுத்துக் கூறிப் போவதற்கு அனுப்பினான்.
(க - து.) வீம மன்னன், ‘நளன் தமயந்தி இருவரும்
துன்பமடைந்து சென்று எங்கிருக்கின்றார்களோ அறிகிலே’
மென்று கருதி, ஒர் மறையவனை அழைத்து, ‘நீ போய்
நளன் தமயந்தி இருக்குமிடத்தைக் தேடி அறிந்து வருக’
என்று கூறி அனுப்பினான் என்பதாம்.
(வி - ரை.) ஈங்கு - அண்மைச் சுட்டு, இடப் பெயராகச்
சேதிநகரைக் குறித்தது. இவள் என்பது: அண்மைச்சுட்டடியாகப்
|