|
தேடிக் காணாமல். இறுதியில் செல்வச்
சிறப்பு வாய்ந்த சேதிநகரில் போய்ச்
சேர்ந்தான் என்பதாம்.
(வி - ரை.) ஓடும் புரவித்தேர் - ஓடுகின்ற குதிரை
பூட்டிய தேர். சூரியன் வட்டவடிவாக இருத்தலால், தேரின் ஓருருளையாகவும், அது
இயங்கும் ஆற்றலைச் சூரியன் ஆகவும், அதினின்றும் வருகின்ற
எழுநிறவண்ண ஒளிக்கதிர்களைக் குதிரைகளாகவும்
உருவகஞ் செய்து கற்பனையாகக் கூறுவது புராண மரபு. அம்முறையில். ‘ஓடும்
புரவித் தேர் வெய்யோன்’ என்றார். வெம்மை+ஆன்=வெய்யோன்
எனத் திரிந்து புணர்ந்தது. வெம்மை - வெப்பம். அல்லது
விரும்பப்படும் தன்மை. அதனையுடையோன் வெய்யோன்
எனப்பட்டான். அன், ஆன், விகுதி ஈண்டு ஆண்பால்
குறிப்பதன்று. பழங் காலத்தே காலம் முதலியவற்றைக் குறிக்க
ஏற்ற விகுதி. இதனைக் 1‘காலம் உலகம்’ 2‘இசைத்தலும்
உரிய’ என்னும் தொல்காப்பிய நூற்பாவானும் அதற்குச்
சேனாவரையர் வரைந்த உரையானும் அறிக. காலம் காலன்,
கூற்று கூற்றுவன், முருகு முருகன் என்பன காண்க. இவைகள்
ஆண்பால் குறிப்பனவல்ல. காலத்தைச் செய்வது காலன் ;
கூறுபடுத்துவது : உடலையும் உயிரையும் வெவ்வேறாகப் பிரிப்பது
கூற்றுவன். முருகு, இளமை மணம் அழகு உடைய பொருள் முருகன்
எனப்பட்டது.
பிறவும் இவ்வாறே பரந்து வருவதை அறிக. இவைகளைப்
போன்றே ஈண்டு வெப்பத்தைச் செய்வது வெய்யோன்
எனப்பட்டது. இவ்வாறே வழக்கினும் கரிக் குருவியைக்
கரிச்சான் என்பதும், மரப் பொந்தில்
வாழ்கின்ற பறவையைக் கோட்டான் என்பதும்,
கழுதையை நெடுஞ்செவியன் என்பதும் வருவன கண்டு தெளிக. விரிப்பின் பெருகும்.
இவைகளும் ஆண்பால்
குறிக்கும் விகுதிகளன்று. போது - பூ : காலத்தின் மலர்ந்தது
என்னும் பொருளது. முன்னரும் நளன் ஆளும் நிடத நாட்டைக் குறிக்க ‘போதில்
சினையாமை
வைகும் திருநாடு’ என்றார். போதில் திரு - திருமகள் :
இலக்குமி. ஒரு நாடு தாமரை மலர்கள் மலரக்கூடிய நாடாக இருப்பின், அது
நீர்வளமுடையதாகக் கொள்ளப்படும்; நீர்வளம்
மிகின், அந்நாட்டில் விளைவு பெருகும்; அது
பெருகினால் அந்நாட்டில் பசி பிணி உயிர்களை அணுகாது ; அவை
அணுகாது விடின், ஆங்கே மக்கள் கல்வி
கேள்வி அறம் வீரம் மானம் முதலியவற்றில் சிறந்து
விளங்குவர்; அவ்வாறு சிறந்து விளங்கின் அந்நாடு
எல்லா நாட்டினும் மேன்மையானதாகக்
கொள்ளப் பெறும் செல்வச் சிறப்பினதாகத் திகழும்.
எனவே, தமயந்தி தங்கியிருக்கும் பேறுபெற்றமையால்,
அந்நாட்டிற்கு இவ்வாறு ஏற்றங் கொடுத்தார். போதில்
1, 2. தொல், சொல் : 57; 59.
|