|
திரு, தாமரை மலரில் வீற்றிருக்கின்ற
திருமகள்போன்ற தமயந்தியெனப் பொருள் கோடலும்
பொருந்தும். மறையவன் இத்தகைய திருநாடு சென்று
கூடினான் எனக்கொள்க. (145)
மறையவன் தமயந்தியைக் கண்டு அழுதல்
324. தாமம்சேர் ஓதித் தமயந்தி நின்றாளை
ஆமென் றறியா அருமறையோன் - வீமன்
கொடிமேல் விழுந்தழுதான் கொம்புமவன் செம்பொன்
அடிமேல் விழுந்தாள் அழுது.
(இ - ள்.) அருமறையோன்-(தமயந்தியைத்தேடிச்
சென்ற) அறிதற்கரிய மறையுணர்ந்த அந்தணன், நின்றாளை
தாமம் சேர் ஒதி தமயந்தி ஆம் என்று அறியா - அந்தபுரத்தில்
நின்று கொண்டிருந்த மாலையணிந்த கூந்தலையுடைய
தமயந்தியேயாமென்று அறிந்துகொண்டு, வீமன் கொடிமேல்
விழுந்து அழுதான் - வீமமன்னன் மகளாகிய பூங்கொடியையொத்த
அத்தமயந்தியின்பால் (வருத்தங் கொண்டவனாய்க்)
கீழே விழுந்து புலம்பினான், கொம்பும் அவன் செம்பொன்
அடிமேல்
அழுது விழுந்தாள் - கொம்பையொத்த தமயந்தியும் அம்
மறையோனுடைய சிவந்த பொன் போன்ற அடிகளின்மேல்
விழுந்து அழுதாள்.
(க - து.) தேடிச் சென்ற மறையவன், அரண்மனை
அந்தப்புரத்தில் நின்றுகொண்டிருந்த தமயந்தியை
அவளேயென்றறிந்து அவள்பால் வருத்தங்கொண்டு அழுதான்;
தமயந்தியும் அவன் காலடியில் வீழ்ந்தழுதாள் என்பதாம்.
(வி - ரை.) தாமம் - பூமாலை. சேர் ஒதி - சேர்ந்த
கூந்தல்: முக்காலவினைத்தொகை. நின்றாளை : இறந்தகால
வினையாலணையும் பெயர் இரண்டனுருபேற்றது. தமயந்தி
ஆம் என்று அறியா எனக் கொண்டு கூட்டுக. வீமன் கொடி -
வீமன் பெற்ற கொடி போன்றவள். கொடிபோல்வாளைக் கொடி
என்றது ஆகு பெயர். மேல் - ஈண்டு இடப் பொருள் குறிக்கும்
ஏழாம் வேற்றுமை உருபு. அதற்குத் தமயந்தி பக்கத்தில்
என்றும் பொருள் கொள்க. கொம்பு - பூங்கொம்பு.
அஃதாவது பூவோடு பொருந்திய செடி, மரம் இவைகளின் கிளை.
தமயந்தி உடல் கொடிபோன்றது. அவ்வுடலிற் பொருந்திய
கண்ணும் முகமும் காதும் கையும் காலும் எல்லாம் மலர்
போறலின், பூங்கொம்பென்றார். செம்பொன் -
மறுவற்ற பொன்.
பொன்போல ஒளியுடைய கால்கள் என மறையோன் திருந்திய
அடிகளை விளக்கினார். (146)
|