|
தமயந்தியும், மறையோனும் வருந்துதல்
கண்டு
நகரமாந்தர் வருந்துதல்
325. மங்கை விழிநீர் மறையோன் கழல்கழுவ
அங்கவன்தன் கண்ணீர் அவளுடல்மேல் - பொங்கக்
கடல்போலும் காதலார் கையற்றார் தங்கள்
உடல்போலும் ஒத்தார் உயிர்.
(இ - ள்.) மங்கை விழிநீர் மறையோன் கழல் கழுவ -
தமயந்தியின் கண்ணீர் வேதியன் கால்களை அலம்பவும்,
அவன் கண்ணீர் அங்கு
- அவ்வேதியன் கண்ணீரானது அவ்விடத்தே, அவள் உடல்மேல் பொங்க -
அத்தமயந்தியின் உடலின்மீது
பெருகி வழியவும், கடல்போலும் காதலார் கை அற்றார் -
கடல் போல் பெருகிய அன்புடைய அந்நகர மக்கள் (இதனைக்
கண்டு) செயலற்று ஒன்றுந் தோன்றாது நின்றார்கள்.
தங்கள் உடல் போலும் உயிர் ஒத்தார் - தங்களின்
உடல் அசையாமல் நின்றது போலவே அவர் உயிரும் தற்செயலற்று
நின்றது.
(க - து.) தமயந்தியும் வேதியனும் அழுங்காலையில்
அளவற்ற நகர மக்கள் கூடி வருத்தத்தால் செயலற்று நின்றார்கள்
என்பதாம்.
(வி - ரை.) தமயந்தி அழுது அழுகையினால் கண்ணீர் பெருகி ஓடி
வேதியன் காலடியிடமெல்லாம் நீர் நிறைந்தது ; அம்
மறையவன் அழுததால் உண்டான கண்ணீர் தமயந்தியின்
உடலெல்லாம் நனைத்தது. அன்புமிக்க வழி, தம் அன்புடையாரிடத்தே
நல்லது காணினும் அல்லது காணினும் இன்பத்தானும்
துன்பத்தானும் கண்ணீர்
பெருகுவது இயல்பு. இதனை,
1‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்’
என்றார் வள்ளுவரும். எனவே, தமயந்திக்கு
நேர்ந்த துன்பநிலை கண்ட மறையவன், தன் மனந்தாங்கலாற்றாது
அழுதான். அவன், அன்பால்
உருகி உகுத்த கண்ணீர் கண்ட தமயந்தியும் அழுதரற்றினாள்;
இவ்விருவர் அழுகையால் உண்டாய கண்ணினீர் இருவர்
உடலையும் நனைத்தது. இதனை ‘கழல்
கழுவ’ ‘உடல் மேல் பொங்க’ என்ற சொற்களால்
விளக்கிக் கூறினார். ‘கடல் போலும் காதலால் கையற்றார்’
என்பதையும், ‘தங்கள் உடல்
1. திருக்குறள் : 71.
|