|
தண்டூன்றா’ என்னும் நாலடியும் காண்க.
வடிவு - ஆகுபெயர். கோதுதல் - ஒதுக்குதல், அல்லது
ஒடித்தல் என்றுரைத்தலுமாம். குருகு - பறவைப் பொதுப்
பெயர். அது ஈண்டு நாரை கொக்கு முதலிய நீர்வாழ்
பறவைகளைச் சுட்டிற்று. தண் - குளிர்ச்சி.
குளிர்ச்சியுள்ள நீரைக் குறித்தது குணவாகு பெயர்.
சேதி - சேதி நாடு. (149)
சேதியரசன் தமயந்தியை அவள் தந்தை
நகருக்கு
அனுப்புதல்
328. கந்தனையும் கன்னியையும் கண்டா யினுஞ்சிறிது
தன்துயரம் தீர்ந்து தனியாறத் - தந்தை
பதியிலே போக்கினான் சேதியர்கோன் பண்டை
விதியிலே போந்தாளை மீண்டு.
(இ - ள்.) சேதியர்கோன் -
சேதிநாட்டு வேந்தனானவன், பண்டை விதியிலே
போந்தாளை - முன்செய்த ஊழ்வினையினால்
(தன்னிடத்து) வந்துசேர்ந்த தமயந்தியை,
கந்தனையும் கன்னியையும் கண்டாயினும் -
முருகவேளையொத்த தன் மகனையும் இளையளாகிய தன்
மகளையும் பார்த்த பின்னராவது, சிறிது தன் தனி
துயரம் தீர்ந்து ஆற - அவள் தான்
தனித்திருப்பதால் ஆன கவலை நீங்கிச் சிறிது
மனம் ஆறுதல் பெற, தந்தை பதியில் மீண்டு
போக்கினான் - தமயந்தியானவளைத் தன்
தந்தையின் நகரமாகிய குண்டினபுரத்துக்குச் செல்ல
அனுப்பினான்.
(க - து.) சேதிநாட்டு மன்னன்
தமயந்தி தன் மக்களைக் கண்டாலாவது
தன்னந்தனியாக இருப்பதால் உண்டாம் துன்பம்
சிறிது தணியுமெனக் கருதிக் தமயந்தியை அவள்
தந்தையர் நகராகிய குண்டினபுரத்துக்கு அனுப்பினான்
என்பதாம்.
(வி - ரை.) கந்தன் - முருகக் கடவுள்.
முருகன் கட்டழகுடையான் ஆதலால் அவன்போன்ற
நளனைக் ‘கந்தன்’ என ஆகுபெயராக்கிக் கூறினார்.
கன்னி - இளம்பெண். தமயந்தியின் மகள்.
முற்றத்துறந்த முனிவரர்களும், இளங்குதலைச்
சிறுவர்களைக் கண்டால் பற்றுக்கொண்டு இன்புறுவர்.
அவ்வாறிருக்கத் தான் பெற்றெடுத்த மக்களைக்
காணின், குழந்தைகளின் அமிழ்தினுமினிய
இன்சொற்கேட்பின் துயரம் மாறுவள் என்பதைக்
கருதினான் சேதிமன்னன் என்பாராய்க் ‘கந்தனையும்
கன்னி
|