|
மானைக் கைக்கொண்டதைப் புராணம் வேறு
கதையாகக் கூறுமேனும் எவ்வுயிரையும் தாங்குகின்ற
நிலையைக் குறித்தற்கே மானைக்
கையிற்கொண்டிருப்பதாக இறைவன் கைப்பகுதியைக்
குறித்தனர் எனக்கொள்க. அரங்கு - சபை : அவை.
பொன் அம்பலம் - பொன்போன்ற
ஒளிவிட்டெறிக்கின்ற பேரொளியிடம். இறைவன்
பேரொளிப் பிழம்பாகவே இருக்கின்றானென்பதற்கு
ஒளிவட்டம் குறிக்கப்பட்டது. அக்குறிப்பிடமே
இங்கே அரங்கு எனப்பட்டதென்க. இத்தகைய இறையை,
இங்குக் குறிகள் அமைத்துக்கொள்ளினும் குறிகுணங்
கடந்த ஒன்றை ‘முன்னைப் பழமைக்கும் முன்னைப்
பழம்பொருளைப் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்
அப்பெற்றியனாய் இருக்கும் பெருமானை வணங்குவோம்’
என்று குறிப்பாற் பெறவைத்தார் ஆசிரியர் என்க.
இறைவன் இயல்பைக் கச்சியப்ப சிவசாரியரும்,
1‘ஊரிலான்குணம் குறியிலான்
செயல்இலான் உரைக்கும்
பேரி லான்ஒரு முன்இலான் பின்இலான் பிறிதோர்
சாரி லான்வரல் பொக்கிலான்
மேல்இலான் தனக்கு
நேரி லான்உயிர்க் கடவுளாய் என்னுளே
நின்றான்.’
என அருளியதும் ஒப்ப நோக்குக.
இவ்வாசிரியர் இந்நூல்
துவக்கத்திலும் பின் கலிதொடர் காண்டத்திலும்
இக்காண்டத்திலும் திருமாலுக்கும்
சிவபெருமானுக்கும் வணக்கங் கூறுதலால், இவர் வைணவ
நெறியோ சைவ நெறியோ எதையும் வேறு
வேறாகக்கொள்ளாது, எல்லாச் சமயமும் உண்மையை
உரைப்பனவே என்னும் பொதுக் கொள்கையுடையவர் என
உணர்க. அதனால் இவர் சமயக் கணக்கரல்லர் எனவும்
ஒரு தலையாகக்கொண்டு, சமரச மனநிலை யுடையாரெனவும்
கொள்க. ஆனால், திருமால் வணக்கத்தை முன்
வைத்துரைத்தலால், திருமால்பாற் பேரன்புடையர்
எனக் கொள்ளக்கிடக்கின்றது. (2)
தமயந்தியைப் பிரிந்து சென்ற நளன்
செய்தி
336. மன்னா உனக்கபயம் என்னா வனத்தீயில்
பன்னாக வேந்தன் பதைத்துருகிச்-சொன்ன
மொழிவழியே சென்றான் முரட்கலியின் வஞ்சப்
பழிவழியே செல்கின்றான் பார்த்து.
1. கந்தபுராணம் :
|