பக்கம் எண் :

மூலமும் உரையும்427

(இ - ள்.) முரண் கலியின் வஞ்ச பழிவழியே செல்கின்றான் - தன்னோடு மாறுபட்ட கலிமகனுடைய வஞ்சனையாகிய தீய வழியிற் செல்கின்றவனாகிய நளன், வனத்தீயில் பல்நகவேந்தன் பதைத்து உருகி - காட்டுத்தீயில் ஒரு பெரும் பாம்பு அகப்பட்டுக்கொண்டு துடித்து மனம் வாடி, மன்னா உனக்கு அபயம் என்னா - வேந்தே ! அடியேன் உனக்கு அடைக்கலம் என்று, சொன்ன மொழிவழியே பார்த்து சென்றான் - அப்பாம்பு கூறிய சொற்கள் வந்த வழியாகவே பார்த்துக்கொண்டு போனான்.

(க - து.) வஞ்சக்கலியின் தீய வழியிற் செல்பவனான நளன், காட்டுத்தீயில் அகப்பட்டுக்கொண்டு வருந்தும் பாம்பொன்று ‘வேந்தனே ! உனக்கு அடைக்கலம்’ என்று கூறிய மொழி வந்த வழியாகவே சென்றான் என்பதாம்.

(வி - ரை.) பல்+நகம் - பன்னகம் என்று புணர்ந்தது. அது தொடை நோகி பன்னாகம் என நீண்டது. அதற்குப் பற்களையே நகமாகவுடையது என்பது பொருள். வேந்தன் - அரசன். அஃதாவது அரசன் மக்களுட் சிறந்திருப்பதுபோல் உயர்ந்த சிறந்த பெரும்பாம்பு. பாம்பினை ஆண்பாற் சொல்லால் கூறுவது அதன் சிறப்புநோக்கி. பாம்பு ஐயறிவுயிரேயாயினும், இப்பாம்பு மக்கட் பண்புகளான செய்ந்நன்றியறிதல், பிறர்க்கு உதவிபுரிதல் முதலிய, நற்குண நற்செயல்கள் உள்ள தன்மையினாலும், அறிஞரும் வியக்கும் அறிவு மேம்பாட்டினாலும் எனத்தெளிக. அப்பாம்பு காட்டுத்தீயில் அகப்பட்டுக்கொண்டு தத்தளித்தது. அவ்வழியே நளன் சென்றதைத் தமயந்தியைத் தன்னந்தனியளாகக் காட்டில் நள்ளிருளில் விட்டுவிட்டுச்சென்ற நெறியல்லா நெறியை நளன் தன் உரிய அறிவொடு செல்லவில்லை யென்பாராய்க் கலிதன் வஞ்சச்சூழ்ச்சியால் நெஞ்சைத் திரிக்க அதனால் செல்கின்றான் என்பராய், ‘முரண்கலியின் வஞ்சப் பழிவழியே செல்கின்றான்’ என்றார். வஞ்சம் - கபடம். பழி - பாவச்செயல்; தீயசெயல். செல்கின்றான் - செல்கின்றவனென நிகழ் காலத்தில் கூறினார், அவன் செல்லும் வழியில் பாம்பு நெருப்பில் கிடந்து வருந்துவதைக் குறிக்க. அது நளமன்னனைக் கண்டது ; ‘மன்னா, உனக்கபயம்’ என அழைத்தது. வேந்தனென இவன் தோற்றத்தானும் இவன் உறுப்பு இலக்கணங்களானும் உணர்ந்தது. எனவே, அரசர்கள் மன்னுயிர்களையெல்லாம் காக்கும் கடப்பாடுடையராகலான் இவ்வாறழைத்து அவனை வேண்டிற் றென்க. (3)