|
நளன், காட்டுத்தீயில் கிடந்து
வருந்தும் பாம்பைக் காணல்
337. ஆரும் திரியா அரையிருளின் அங்ஙனே
சோர்குழலை நீத்த துயரோடும் - வீரன்
திரிவான்அத் தீக்கானில் செந்தீயின் வாய்ப்பட்
டெரிவானைக் கண்டான் எதிர்.
(இ - ள்.) ஆரும் திரியா அரை இருளின்
அங்ஙனே - எத்தகைய அஞ்சாநெஞ்சினரும் துணிந்து
செல்லற்கியலா நடு இரவில் (பாழ்
மண்டபத்தைவிட்டு) வந்தவாறே, சோர் குழலை நீத்த
துயரோடும் - தாழ்ந்த கூந்தலையுடைய
தமயந்தியைவிட்டு விட்டுப் பிரிந்துவந்த
துன்பத்துடனே, வீரன் திரிவான் - வீரனும் அங்கே
சுற்றித்திரிகின்றவனுமாகிய நளமன்னன், அத்தீக்
கானில் செந்தீயின் வாய்பட்டு - அக்கொடிய
காட்டினிடத்தே செந்நெருப்புத் தழலில்
அகப்பட்டுக்கொண்டு, எரிவானை எதிர் கண்டான் -
வருந்திக்கொண்டிருக்கின்ற
கார்க்கோடகனென்னும் அப்பாம்பை நேரே
பார்த்தான்.
(க-து.) பாழ் மண்டபத்தில் தன்
மனையாளாகிய தமயந்தியைவிட்டுப் பிரிந்துவந்த
நளன், யாரும் செல்ல வொண்ணாத நள்ளிருட்
பொழுதில் அக்காட்டில் நெருப்பின் வாய்ப்பட்டு
வருந்துகின்ற பாம்பினை நேரே கண்டான் என்பதாம்.
(வி - ரை.) ஆரும் - யாரும். யார்
என்பதன் மரூஉ. உம்மை இருளில் திண்மையையும்
அஞ்சத் தக்க நிலையையும் தருதலால்,
உயர்வு சிறப்பும்மை. அங்ஙனே - அவ்வாறே என்னும்
பொருளில்
வந்தது. சோர்குழல்: வினைத்தொகை
நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகையாகத்
தமயந்தியைக் குறித்தது. வீரன் - கலங்கா மனநிலை
கொண்டவன். எரிதல் - ஈண்டுச்சுடுதல் என்னும்
பொருளாய் அதனாலாகிய துன்பத்தைக் குறித்தது.
முற்பாட்டில் ‘மொழிவழியே சென்றான்’
என்றதற்கேற்ப, அம்மொழி தோன்றிய இடத்தே
பெரும் பாம்பு ஒன்று நெருப்பில்
அகப்பட்டுக்கொண்டு தத்தளிப்பதை நேரே
கண்டானென்பாராய்க் ‘கண்டான் எதிர்’
என்றார். எதிர் - நேர். முன்னே என்னும் பொருளது.
காட்டின் மிக்க வெப்பத்துக்கு ‘தீக்கான்’
என்றும், அவ்வெப்பத்தோடு வெப்பமாய்க்
கனன்றெறிக்கும் நெருப்பின் மிக்க
கொதிப்புக்குச் ‘செந்தீயின் வாய்’ என்றும்
தெளிவுற ஆசிரியர் எடுத்து விளக்கியிருக்கும்
ஒட்பம் மகிழ்வும் இறும்பூதும் மிக்குள்ளமை
யறிந்தின்புறுக. (4)
|