|
நளன், தீக்கடவுள் தந்த வரத்தால்
அந்நெருப்புக்கு ஊடே அஞ்சாது போகுதல்
338. தீக்கடவுள் தந்த வரத்தைத் திருமனத்தில்
ஆக்கி அருளால் அரவரசை - நோக்கி
அடைந்தான் அடைதலுமே ஆரழலோன் அஞ்சி
உடைந்தான்போய்ப் புக்கான் உவந்து.
(இ - ள்.) தீ கடவுள் தந்த வரத்தை -
நெருப்புக்கடவுள் தனக்குக்கொடுத்த வரத்தினை,
திருமனத்தில் ஆக்கி - தன் நல்ல நெஞ்சத்தில்
எண்ணி, அரவு அரசை அருளால் நோக்கி அடைந்தான் -
அக்கார்க்கோடகனென்றும் பெரும் பாம்பைத் தன்
இரக்க உணர்வால் கண்ணாற் பார்த்துக்கொண்டு
அதன் பக்கத்தே போனான், அடைதலுமே ஆர் அழலோன்
அஞ்சி உடைந்தான் - இவன் சென்றவுடனே
நெருப்புக்கடவுள் அச்சங்கொண்டு தன்
வேகந்தணிந்து நின்றான், உவந்துபோய் புக்கான் -
(அதனால் நளன்) மனம் மகிழ்ந்து உள்ளே சென்று
நுழைந்தான்.
(க - து.) நெருப்புக்கடவுள் தந்த
வரத்தை எண்ணிக்கொண்டு நளன் அஞ்சாது பாம்பருகே
சென்றான்; அவன் சென்றவுடன் நெருப்புக்கடவுள்
அஞ்சித் தன் வேகந்தணிந்தான்; அதனால்
மகிழ்ந்து அந்நெருப்பின் உள்ளே சென்று
நுழைந்தான் என்பதாம்.
(வி - ரை.) தீ கடவுள் - தீக்கடவுள்.
இருபெயரொட்டுப் பண்புத்தொகை. கடவுள் என்பது, கட
என்னும் பகுதியும் உள் என்னும் விகுதியும் பெற்ற
தொழிற்பெயர். இதற்குக் கடத்தல் என்பது பொருள்.
கடத்தல் என்பது எல்லா நிலையையும் கடந்து
நிற்றல். நெருப்புக்குமுன் எது நிற்பினும்
அவைகளையெல்லாம் அழித்து அதன் நிலையைக் கடந்து
நிற்பதென்பதாகும். இதேபோன்று உலக
நிலையெல்லாங்கடந்து மனமொழி மெய்களுக்கு
எட்டாத வான்பொருளாய் நிற்கும் இறைவனையும்
கடவுளென அழைப்பர். இவ்வாறு ஆற்றல் மிக்க
பொருள்களையெல்லாம் ‘கடவுள்’ எனக்கூறுதல்
பண்டைத்தமிழ்ச் சான்றோர் மரபு. நீர்க்கடவுள்,
நிலக்கடவுள் முதலிய வழக்குகளையும் ஓர்க.
இம்முறையிலேயே ஈண்டுத் ‘தீக்கடவுள்’ என்றார்.
திருமனம் - சிறந்த மனம். சிறந்த மனமாவது அன்பு
அருள் நிறை பொறை ஓர்ப்பு முதலிய மக்கட்பண்பு
அடுத்த தன்மைகள் படைத்த மனம். முன்னர், நளன்
தமயந்திபால் தூது சென்றமைக்கு மகிழ்ந்து வருணன்
முதலியோர் நளனுக்கு வரங்கொடுத்தபோது தீக்கடவு
|