பக்கம் எண் :

432நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

நான் சாபம் நீங்கப்பெறுவேன், கூரும் தழல் அவித்து - இந்த மிக்க நெருப்பைக்கெடுத்து, கொண்டுபோய் பாரில் விடுக என்றான் - என்னை எடுத்துக்கொண்டுபோய்த் தரையில் விடுவாயாக என வேண்டினான்.

(க - து.) அப்பாம்பரசன் நளமன்னனை நோக்கிச், ‘சிறப்புடையாய், நீ என்னை இந்நெருப்பினின்றும் எடுத்துக்கொண்டுபோய்த் தரையில் விடுவாயானால் நான் இச்சாபத்தினின்றும் விடுபடுவேன்’ என்றான் என்பதாம்.

(வி - ரை.) சீரியன் - சிறப்புடையவன். விளி வேற்றுமையாதலால் அன், ஆயாக மாறிற்று. எடுப்ப - எடுத்தால் என எதிர்காலங் குறித்த செயவென் எச்சம். கெடுகின்றேன் - நீங்குகின்றேன் என்னும் பொருளது. கெடுகின்றேனென்பது ஈண்டுத்துன்பங் கெடுகின்றேனென்னும் பொருட்டாய்த் துன்ப நீக்கத்தைக் குறித்த குறிப்புச்சொல். அது தெளிவு பற்றி எதிர் காலம் நிகழ்காலமாக வந்த காலவழுவமைதி. கூர்தல் - மிகுதல் என்னும் குணப்பண்பு பற்றிய உரிச்சொல். இங்கே நெருப்பின் மிகுதி குறிக்கவந்தது. பார் - பூமி, பரந்த (விரிந்த) தன்மை உள்ளதென்னும் பொருளது. விடுக: வியங்கோள் ஏவல். விகாரத்தால் அகரம் தொக்கு நின்றது. வேல் வேந்தென்பது, தீமை கடிந்து நலஞ்செய்யும் நன்மை சான்றவன் என்னும் குறிப்பிற்று. (7)

நளன், பாம்பரசன் வேண்டியவாறு அவனை எடுத்துக்கொண்டு
வெளியே செல்லல்

341. என்றுரைத்த அவ்வளவில் ஏழுலகும் சூழ்கடலும்
குன்றும் சுமந்த குலப்புயத்தான் - வென்றி
அரவரசைக் கொண்டகன்றான் ஆரணியம் தன்னில்
இரவரசை வென்றான் எடுத்து.

(இ - ள்.) என்று உரைத்த அவ்வளவில் - (என்னை வெளியே எடுத்து விடுக) என்று அரவரசன் வேண்டிக்கொண்ட அவ்வேளையில், ஏழ் உலகும் சூழ்கடலும் குன்றும் சுமந்த குலப் புயத்தான் - ஏழு உலகங்களையும் அவ்வுலகங்களைச் சூழ்ந்திருக்கின்ற கடலையும் மலைகளையும் தன் ஆட்சிமுறையில் தாங்கிய மேன்மை பொருந்திய தோள்களையுடையவனும், ஆரணியம் தன்னில் இரவு அரசை வென்றான் - (கொடிய) கானகத்தினிடத்தே கொடியஇருட்டையும் பொருட்படுத்தாது செல்கின்ற