|
மாயிற்று; அழகு மிக்க தோள்களும் தன்
வனப்பின் பொலிவும் உயர்ச்சியும் கவர்ச்சியும்
சுருங்கின. இதற்கு ஓர் உவமங் கொடுத்து, அதன் மூலம்
ஒரு நீதி முறையையும் மன்பதை உலகிற்குக் கொடுத்து
உதவுகின்றார் ஆசிரியர். செல்வம் பெற்ற மக்கள்
தம் செல்வத்தை இடனின்று இரந்தார்க்கொன்றீ
தலே கடமையாகும் ; அதுவே இறைவன் படைப்பு
நோக்கத்துக்கும் உலகியல் நெறிக்கும் ஒத்த
முறையாகும். அவ்வாறு ஈதலின்றிச் செல்வத்தைப்
பயனின்றித் தொகுத்து வைப்பதால் அச்செல்வம்
பயனுமின்றிப் பிறரால் கொள்ளை முதலியவற்றால்
கொள்ளப் பெற்று அழிந்து கெடுவதும் உறுதியாகலான்,
அதனை உவமமாக்கி அச் செல்வம் நாளுக்கு நாள்
குறைந்து கெடுவது போல, இத்தோள்களும் பொலி
வழிந்தன என்பாராய்க் ‘கொடாதார் அகம்போலக்
குறுகிற்றே’ என்று அவர் இல்லத்தின் மேலேற்றிக்
கூறினார். அன்றியும்அகம் என்பதற்குக்
கொடுக்காதவர் மனம் விரிவடையாததுபோல
என்றலுமாம். அற நூலும் இதனானே,
1‘துய்த்துக் கழியான்
துறவோர்க்கொன் றீகலான்
வைத்துக் கழியும் மடவோனை - வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்
தருளும் அவனை நகும்.’
என முழங்குதலும் அறிக.
2‘செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புந பலவே’
என்றும்,
3‘இல்லென இரந்தோர்க்
கொன்றீயாமை இளிவு’
என்றும் சங்ககாலச் சான்றோர்
கூறதலாலும்,
4‘அற்றார்க்கொன் றாற்றாதான்
செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று’
என்னும் வள்ளுவர் வான்மறையானும்
அறிக.
மெய்ம்மை விடாதான் - உண்மை நெறிக்கு
மாறுபடாமல் நடப்பவன். அஃதாவது,
பொய்ந்நெறிபுகாத புகழுடையான் என நளன்றன்
தகுதிப்பாடுரைக்கப் பட்ட தென்க. (11)
1. நாலடியார் : 273. 2. புறம் : 189.
3. கலித்தொகை : 2. 4. திருக்குறள் : 1007.
|