|
நளன், தன்னைக் கடித்த பாம்பரசனை
நோக்கி வினவுதல்
345. ஆற்றல் அரவரசே ஆங்கென் உருவத்தைச்
சீற்றமொன் றின்றிச் சினவெயிற்றால் - மாற்றுதற்கின்
றென்கா ரணமென்றான் ஏற்றமரில் கூற்றழைக்கும்
மின்கால் அயில்முகவேல் வேந்து.
(இ - ள்.) ஏற்ற அமரில் கூற்று
அழைக்கும் - (பகைவர்க்கும் தனக்கும்) மூண்ட
போர்க்களத்தில் (அவர்கள் உயிரைக் கொண்டு
செல்லுதற்கு) இயமனை (வருக வருக) என்று கூப்பிடுகின்ற,
மின்கால் அயில்முக வேல் வேந்து -
ஒளிவிட்டெறிக்கின்ற கூரிய நுனியுடைய வேற்படை
யேந்திய நளமன்னனானவன், ஆற்றல் அரவு அரசே -
வல்லமைமிக்க பாம்புக் கரசனே ! இன்று சீற்றம்
ஒன்று இன்றி - இப்பொழுது (என்னால் நலம் பெற்ற நீ)
என் மேல் சினம் வரக் காரணமில்லாதிருக்கவும்,
ஆங்கு என் உருவத்தை - முன்பிருந்த என் உடல் வடிவ
நிறத்தை, சின எயிற்றால் மாற்றுதற்கு காரணம் என்
என்றான் - உன்னுடைய சினம் பொருந்திய பற்களால்
வேறு படுத்தியதற்குக் காரணம் என்ன என்று
கேட்டான்.
(க - து.) நளமன்னன் அப்பாம்பரசனை
நோக்கி, ‘பாம்பரசனே ! இப்பொழுது உனக்கு உதவி
செய்த என் மேல் உனக்குச் சினமுண்டாகக் காரணமே
இல்லை ; அவ்வாறிருந்தும் உன் சினம் பொருந்திய
பற்களால் என்னைக் கடித்து என் உருவத்தையே
மாற்றினாய் ; அதற்குக் காரணம் என்ன?’ வென்று
கேட்டான் என்பதாம்.
(வி - ரை.) ஆற்றல் - வன்மை.
யானைபோன்ற பேருருவ உயிர்களையும் தன்
பல்லென்னும் படையால் வெல்லும் திறம். உருவம் -
நிறத்தைக் குறித்தது. சீற்றம் அதன் காரணத்துக்கு
ஆகுபெயர். ஒன்று என்பதில் இசை நோக்கி முற்றும்மை
குறைந்து நின்றது. ஒன்றும் என உம்மைவிரிக்க.
பாம்பின் சினத்தைப் பல்லின்மேல் ஏற்றிச் ‘சின
எயிறு’ என்றது இலக்கணை வழக்கு. ஏற்ற அமரில்
ஏற்றமரில் என நிலைமொழி அகரம் விகாரத்தால்
தொக்கது. கூற்றழைத்தல் - கூற்றத்தை அழைத்தல் என
விரிதலால் இரண்டனுருபு மறைந்து நின்றது. இரண்டன்
தொகை. கூற்றத்தை அழைத்தலென்னும் குறிப்புச்
சொல், தவறாது வெல்லுந் தன்மையைச் சுட்டி நின்றது.
|