வருப்பு.) என்பர், நச். திருவிழா முதலிய
கூட்டங்களில் ஏனைய ஆடவரால் தன் உடலைத் தீண்ட
நேர்ந்தபோது உண்டாகும் மனநடுக்கமே இது. இவைகளை
நால்வகைப் படைகளாகக் கொண்டு பெண்தன்மையை
ஆள்வதாகக் குறித்தார். பிறவும் அவ்வாறே. பெண்மை
- பெண்தன்மை. எவரையும் தன் கனிந்த குணத்தால்
வயப்படுத்தும் இயல்பு.
படையாக அமைச்சராக என்பவைகளிலுள்ள
இறுதிக் ‘ககர உயிர்மெய்’ குறைந்து நின்றது. (32)
தமயந்தியின் இடை மென்மை எனல்
40. மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு - நாட்டேன்
அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு.
(இ - ள்.) இடை - தமயந்தியின்
இடையானது, மோடு இளம் கொங்கை - உயர்ந்துள்ள இனம்
கொங்கைகளை, முடிய சுமந்து ஏறமாட்டாது என்று - அவள்
வாழ்நாள்வரையும் தாங்கி நிற்கும்
வலிமையுடையதாகாதென, நூபுரங்கள் - (அவள் தன்
காலிலணிந்துள்ள) சிலம்புகள், நாள்தேன்
அலம்புவார்கோதை - புதிய தேன் மேலெழும் (மலர்சூடிய)
கூந்தலாளின், அடி இணையில் வீழ்ந்து - இரண்டு
அடிகளிலும் தாழ்ந்துகிடந்து, பூண்டு புலம்பும் -
(அக்கால்களுக்கு அணியாக) அமைந்து வாய் திறந்து
ஒலிக்கும்.
(க - து.) ‘ தமயந்தியின் நுசுப்பு
கொங்கைகளைத் தாங்கா ’ தென்று சிலம்புகள்
புலம்புகின்றனபோல் ஒலிக்கின்றன வென்பதாம்.
(வி - ரை.) மோடு - உயர்வு. முடிய -
முற்றமுடிய, தனங்கள் மேலும் வளரும்வரை. சுமந்து
தாங்க இயலாததாய்த் தமயந்தியின் இடை உள்ளதென
அதன், நுண்மை கூறியவாறு. காலிற் கிடந்து சிலம்பும்
சிலம்பின் ஒலியை இடையின் பாரந்தாங்கலாற்றா
மென்மைகண்டு புலம்புவதாகக் கூறினார். தற்குறிப்பேற்றவணி.
கோவலனும் கண்ணகியும் மதுரைமா
நகரடைந்தபோது அந்நகர்க் கொடிகள் காற்றினால்
அசைந்த காட்சியைப் பின்கோவலற்கு நேரும்
தீமைகண்டு, அந்நகர்மங்கை தன் கைக
|