|
விரைந்து - உன் உருவத்தை வேறு உருவமாக
மாற்றியதாகுமென அறிவாயாக என்று விரைவாகக்
கூறினான்.
(க - து.) பாம்பு மன்னன் நளனை
நோக்கி, ‘அரசனே! என் பெயர் கார்க்கோடகன் ;
நீ இக்காட்டிற்கு வந்ததை யான் அறிந்து கொண்டு,
உன் வடிவத்தை வேறாக்கிக்கொண்டு மறைந்து
இருக்கவேண்டும் காரணமாகவே உன்னை நான் கடித்து
உதவி செய்தேன்’ என்று கூறினான் என்பதாம்.
(வி - ரை.) காய்தல் - வருத்துதல்,
அல்லது சினத்தல் என்னும் பொருளது. இங்குப்
பகைவரைச் சினக்கும் என்று பொருளுரைக்கப்பட்டது.
கடம் - மதநீர். ஆண் யானைக்குக் காதுகளிலும்,
மத்தகத்திலும், ஆணுறுப்பிலுமிருந்து மதநீர் ஒழுகும்.
அவ்வாறொழுக்கு ஏற்பட்டால் அது மிக்க
ஆற்றலுடையதாய் - யாராலும் இடக்க
வொண்ணாததாய்த் - தன் கண்முன் காண்பனவற்றை
யெல்லாம் அழிக்கும். அது போர்க்களத்தில்
மதங்கொண்டால் அதன் ஆற்றல் கூற வேண்டா ;
அத்தகைய ஆற்றல் மிக்க கடா யானைகளையுடையா
னென்பாராய்க் ‘காயும் கடகளிற்றாய்’ என்றார்.
காயம் - உடல். வேறு ஆக்கிற்று - வேறாக்கியது.
வினைப்பெயர். அரவரசன் தான்
நன்றிமறந்தவனல்லன் என்பாராய் ‘வேறாக்கிற்
றென்றான் விரைந்து’ என்றார். விரைந்து :
இறந்தகால வினையெச்சம். அஃது, என்றான் என்னும்
வினைமுற்றுச்சொல் கொண்டு முடிந்தது. (13)
கார்க்கோடகன், நளனுக்கு ஆடை
கொடுத்தல்
347. கூனிறால் பாயக் குவளை தவளைவாய்த்
தேனிறால் பாயும் திருநாடா - கானில்
தணியாத வெங்கனலைத் தாங்கினாய் இந்த
அணியாடை கொள்கென்றான் ஆங்கு.
(இ - ள்.) (கார்க்கோடகன் நளனை
நோக்கி) கூன் இறால் பாய - வளைவுள்ள இறால்
மீன்கள் துள்ளிப் பாய்வதனால், தவளை வாய் குவளை
தேன் இறால் பாயும் திரு நாடா - தவளைகளின்
வாயிடத்தே குவளை மலர்களிலுள்ள தேனானது
(தேனிறாலிலிருந்து ஒழுகுவது போல்)
பாய்ந்தோடுகின்ற நீர்வள மிக்க அழகிய நிடத
நாட்டு வேந்தே!, கானில் தணியாத வெம் கனலை
தாங்கினாய் - காட்டிடத்தே ஆறாத கொடிய தீயை
எனக்காகப் பொறுத்துக்
|