பக்கம் எண் :

442நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

எண்ணும்போது இவ்வழகுள்ள ஆடையை அணிந்தால் உன் உண்மை வடிவம் வரும்’ என்றான் என்பதாம்.

(வி - ரை.) சாதிமணி-போலிமணியல்லாத உயர்ந்த மாணிக்கக் கல். அது செந்நிறத்தால் அழகொளி மிளிர்வது. அது போன்ற ஆடை யென்றமையால் செந்நிற ஆடையெனக் கருதலாம். அல்லது அதுபோல் விலையுயர்ந்ததெனவும் கொள்ளலுமாம். மணித்துகில் - மணிபோன்ற துகில் என விரிதலால் உவமைத்தொகை. துகில் - உயர்ந்த மெல்லிய ஆடை. துகில் உயர்ந்த ஆடை யென்பதனை,

1‘வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே
பட்டும் துகிலும் உடுத்து’

எனவரும் நாலடியார் உரையானும் அறிக. ‘தண்கழுநீர்.........துறை நாடு’ என்பது, நிடத நாட்டின் நீர்வளச் சிறப்புக் கூறியவாறு. ‘ஒளிக்கும் நாள் நீங்கும் உரு சாதி மணித்துகில் நீ சாத்தினால்’எனக்கொண்டு பொருள் அறியக் கிடத்தலால் விற்பூட்டுப் பொருள்கோள். (15)

கார்க்கோடகன், நளனை நோக்கி, ‘உன் பெயர் வாகுகன்
என்றாகுக’ எனல்

349. வாகு குறைந்தமையான் வாகுகனென் றுன்னாமம்
ஆக அயோத்தி நகரடைந்து - மாகனகத்
தேர்த்தொழிற்கு மிக்கானீ ஆகென்றான் செம்மனத்தால்
பார்த்தொழிற்கு மிக்கானைப் பார்த்து.

(இ - ள்.) (கார்க்கோடகன்) செம்மனத்தால் பார்த்தொழிலில் மிக்கானைப் பார்த்து - நடுகின்ற நல் நெஞ்சப் பாங்கினால் அரசாட்சி முறையில் சிறந்த நளமன்னனை நோக்கி, வாகு குறைந்தமையால் - (உன்னுடைய) தோள்களின் அழகு மெலிவடைந்து குறைபட்டமையால், உன் நாமம் வாகுகன் என்று ஆக - உன் பெயரானது வாகுகனென்று வழங்கும்படி, நீ அயோத்திநகர் அடைந்து - நீ அயாத்திமாநகரத்திற்குச் சென்று, மாகனக தேர்த்தொழிற்கு மிக்கான் ஆக என்றான் - சிறந்த பொன்னானியன்ற தேர்ஓட்டுந் தொழிலிற் சிறந்தவனாக இருப்பாயாக வென்றான்.

1. நாலடியார் : 264.