|
(க - து.)கார்க்கோடகன் நளனை
நோக்கி, ‘உன் வாகு குறைந்தமையால் உன் பெயர்
வாகுக னென்று வழங்கும்படி நீ அயோத்தி நகருக்குச்
சென்று சிறந்த தேரோட்டுபவனாக இருப்பாயாக’
என்று கூறினான் என்பதாம்.
(வி - ரை.) வாகு - அழகு. உலக
வழக்கிலும் அழகிற் சிறந்தவனை நல்ல ‘வாகன்’
என்பர். இது வடசொல்லன்று, தூய தமிழ்ச்சொல்.
பிறரெல்லாரும் வடசொல்லென மயங்கிப் பொருள்
விரிப்பர். குறைதல், நளனுக்கு இயற்கையாக இருந்த
அழகு குறைந்து நிறம் மாறுபடல். மா கனகத்தேர் -
குதிரை பூட்டிய பொன்னாலியன்ற தேரெனினும்
பொருந்தும். தேர்த் தொழிற்கு, பார்த்தொழிற்கு
என்பன, குவ்வுருபு ஏழனுருபுக்கு மயங்கிவந்த வேற்றுமை
மயக்கம். நளன் சிறப்பை நூல் துவக்கத்தில்
தமயந்திக்கு அன்னம் அறிமுகப்படுத்துவதாகக்
குறித்த காலத்தில் ‘செம்மனத்தான் தண்ணளியான்’
என்னும் கருத்தையே ஈண்டும் ‘செம்மனத்தான்’
என்று புகுத்துரைத்தார். செம்மனமாவது, ஓர்ந்து
கண்ணோடா திறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து
செய்யும் நடுநிலை மாறா மனப்பண்பு. அப்பண்பு
மேம்பாட்டினால் உலகைக் காக்கும் அரசுமுறை
கொண்டவனை இப்போது தேர்த்தொழில் செய்யுமாறு
கூறுகின்றான்; இஃது ஊழின் வலிபோலும் எனக்
கழிவிரக்கந் தோன்ற ஆசிரியர் கூறினார். (16)
நளன், கார்க்கோடகன் கூறியவாறு
புறப்படல்
350. இணையாரும் இல்லான் இழைத்த உதவி
புணையாகச் சூழ்கானில் போனான் - பணையாகத்
திண்ணாகம் ஓரெட்டும் தாங்கும் திசையனைத்தும்
எண்ணாக வேந்தன் எழுந்து.
(இ - ள்.) பணை ஆகம் திண் நாகம்
ஓர் எட்டும் - பருத்த உடல்வலிமை மிக்க எட்டு
யானைகளும், தாங்கும் திசை அனைத்தும் - சுமக்கின்ற
(உலகின்) எல்லாத் திசைகளினும், எண் ஆக வேந்தன்
எழுந்து - தன் எண்ணம் போலவே நடக்கும்படி ஆண்ட
நளமன்னன் புறப்பட்டு, இணையாரும் இல்லான் - தனக்கு
ஒப்புச் சொல்வதற்கில்லாதவனான
கார்க்கோடகனானவன், இழைத்த உதவி புணைஆக
சூழ்கானில் போனான் - செய்த உதவியையே தனக்குத்
துணையாகக் கொண்டு (புதர்கள்) மண்டியுள்ள காட்டின்
வழியாகச் சென்றான்.
|