பக்கம் எண் :

மூலமும் உரையும்445

அறம் மறம் ஆண்தகைமை முதலியவற்றையும் துணையாக அதனோடு கொண்டு என விரித்துப் பொருள் கொள்ளலுமாம்.

நாகம் - யானை. ஓரெட்டும் என்னும் தொகைக் குறிப்பினால் திக்கிலுள்ள எட்டு யானைகளையும் உணர்த்திற்று. எட்டுத் திசைகளையும் யானைகள் தாங்குகின்றன என்பது புராணக் கூற்று. அதனால் ‘நாகம்......தாங்கம் திசை’ என்றார். நளன் வேந்தனாக விளங்கிய காலத்தில் அவன் புகழ் எங்கும் மண்டிக் கிடந்தது ; அவன் ஆட்சியும் எங்கும் பரவிநின்றது ; இவன் நாட்டில் பசியும் பிணியும் பகையும் இல்லாதாயின ; வசியும் வளனும் சுரந்து பெருகியிருந்தன ; இவன் நாடு அரவும் சூரும் இரைதேர் முதலையும், உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா உயர்நிலை பெற்றுத் திகழ்ந்தது. அத்தகைய ஆட்சியில் உயர்நிலை பெற்றிருந்த மன்னன் என்பாராய்த் ‘திசையனைத்தும் எண்ஆக வேந்தன்’ என்றார். ஆக என்னும் செயவெனெச்சம் ஈண்டுக் காரியப் பொருட்டாய் இறந்தகாலங் காட்டிற்று. ‘மழை பெய்ய நெல்விளைந்தது’ என்பதுபோல. ஆண்ட என்னும் சொல், ஆக என்னும் சொற்கேற்ப வாராததால் சொல்லெச்சமாக வருவித் துரைக்கப்பட்டது. (17)

நளன், காட்டைவிட்டு நீங்கிச் சென்று கடலைக் காணுதல்

351. நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையேமூளும்
கனற்புகைய வேகின்றான் கண்டான் - பனிக்குருகு
தண்படா நீழல் தனிப்பேடை பார்த்திரவு
கண்படா வேலைக் கரை.

(இ - ள்.) தண்படாம் நீழல் பனிகுருகு - குளிர்ச்சி பொருந்திய கொடிகளின் மேற்கட்டி போன்ற நிழலின்கீழ் (குளிரால்) நடுங்கிக்கொண்டிருக்கின்ற ஆண் நாரையானது, தனி பேடை பார்த்து - ஒன்றியாய்ப் பிரிந்து சென்றுள்ள தன் பெண் நாரையைக் காணாது எதிர்நோக்கி, இரவு கண்படா வேலைகரை - இரவு முழுதும் தூங்காமல் விழித்துக்கொண்டிருக்கின்றதான கடலின் கரையை, நினைப்பு என்னும் காற்று அசைப்ப - (தன் காதல் மனையாளாகிய தமயந்தியை) நினைத்தல் என்னும் காற்று மோதித் தன்னை அலைத்தலினால், நெஞ்சு இடையே மூளும் - தன் மனத்திடத்தே பற்றிநிற்கின்ற, கனல்புகைய - (அவள் பிரிவாகிய துன்பத்) தீ புகைந்து எரிவதனால், வேகின்றான் கண்டான் - புழுங்குகின்றவனான நளமன்னன் பார்த்தான்.