|
(க - து.)தமயந்தியின்
பிரிவுத்துன்பத்தால் வருந்துகின்றவனான
நளமன்னன், ஆண் நாரையானது தன் பேடையைப் பிரிந்து
அதனை எதிர்நோக்கி வருந்தி இரவு முழுதும்
தூங்காமல் இருக்கின்றதான கடற்கரையைக் கண்டான்
என்பதாம்.
(வி - ரை.) தமயந்தியைக் காட்டில்
விட்டுப் பிரிந்துசென்ற நளன், தன் மனையாளை
நினைந்ததைக் காற்றாகவும் பிரிவுத்துயரை
நெருப்பாகவும் உருவகஞ் செய்து, ‘நினைப்பென்னும்
காற்றசைப்ப.........வேகின்றான்’ என்ற தொடரால்
உணர்த்தினார். குருகு - வெண்ணிறமுள்ள பறவை : ஈண்டு
நாரை. ‘பேடை’ எனப் பின்வருதலால் ஆண்
நாரையென்று பொருள் கூறப்பட்டது. கடற்கரை
ஓரங்களில் அடம்பு முதலிய கொடிகள் பின்னிப்
பிணைந்து படர்ந்து கிடக்கின்றன. அக்கொடிகளின்
வளைந்த வெளிக்குள் நாரைகள் இருத்தலால்
அக்கொடிகள் மேற்கட்டி (விதானம்) போல்
இருக்கின்றன. அதனுள் இருக்கும் ஆண் நாரை தன்
பேடையை நினைந்து வருந்துகின்றன என்னுங் குறிப்பு,
நளன் பிரிந்து தன்னந்தனியாகச் செல்வதை யொப்ப
இருப்பது போன்ற தன்மையை உணரவைத்துணர்த்தினார்.
கண்படுதல் - கண்ணுறக்கங் கொள்ளல் ; கண்படா -
தூங்காத என்னும் பொருள். தான்: ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம். பேடை பெண்ணினத்துக்கு
வந்த மரவுச் சொல். 1‘பேடையும்
பெடையும்.........பெண்ணே’ என்னும் மரபியல்
நூற்பாவினால் அறிக. (18)
நளன், நாரையை நோக்கிக் கூறுதல்
352. கொம்பார் இளங்குருகே கூறா திருத்தியால்
அம்புயத்தின் போதை அறுகாலால் - தும்பி
திறக்கத்தேன் ஊறும் திருநாடன் பொன்னை
உறக்கத்தே நீத்தேனுக் கொன்று.
(இ - ள்.) (இவ்வாறான கடற்கரைப்
பாங்கில் சென்ற நளன் அக்குருகை நோக்கி)
கொம்புஆர் இளம் குருகே - மரக்கிளைகளில்
தங்கியிருக்கின்ற தன்மையையுடைய இளநாரையே !,
தும்பி - வண்டுகளானவை, அம்புயத்தின் போதை
அறுகாலால் திறக்க - தாமரை மலர்களைத் தம்
ஆறுகால்களினால் கிண்டி நெகிழ்த்த, தேன் ஊறும்
திருநாடன் பொன்னை - உடனே தேன் ஊற்
1. தொல், பொருள், மரபியல் : 3.
|