பக்கம் எண் :

452நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

போதில் விழித்தெழுந்த காலை, என் நினைக்கும் எனக்கு சொல்வீர் - என்னைக் குறித்து என்ன நினைந்திருக்கமாட்டாள் நீவிர் எனக்கு அதைச் சொல்வீராக.

(க - து.) நளனானவன், ‘குவளைகளே! கடற்கரையே! நாரையே ! என் காதலியாகிய தமயந்தியானவள் அக்காட்டில் நான் விட்டுவந்தபோது விழித்து உணர்வு வந்ததும் என்னைப்பற்றி என்ன நினைந்திருப்பாள் ? எனக்கு அதனைக் கூறுங்கள்’ என்றான் என்பதாம்.

(வி - ரை.) பானல் - நீலோற்பலம் என்பர். அதன் மலராகக் கோடலுமாம். பசுந்தென்றல் - பசுமை+தென்றல். பசுமை : இளமையென்னும் பொருளது. 1‘உச்சி மோந்தும் அப்பச்சிளங்குழவி’ என்றவிடத்துப் பசுமை இளமை என்னும் பொருள் தருதலை ஓர்க. இளந்தென்றலாவது மென்மையாகத் தவழ்ந்து செல்லும் நறுங்காற்று. கானல் - கடற்கரை. ‘கானல் வரி’ என்னும் சிலப்பதிகாரத் தொடரில், கானல் இப்பொருட்டதல் அறிக. குருகு - நாரை. தன்முன் காட்சியறிக்கின்ற கடற்கரைப் பொருள்களையும் பிறவற்றையும் முன்னிலைப்படுத்தித் தன் பிரிவாற்றாமையை அவைகளுடன் கழறி ஆற்றாமை கொள்கின்றான் நளன்.

‘மின் இமைக்கும் பூணாள்’ என்பது, தமயந்தி களங்கமற்ற உள்ளத்தாள் என்னும் குறிப்புணர நின்றது. என் நினைக்கும், என்ன தாழ்மையாகக் கருதுவாள் எனவும், இரண்டனுருபு தொக்க தொடராகக்கொண்டு என்னை நினைக்கும் என்று கொள்ளலுமாம். நினைக்கும் என்பது செய்யுமென் வினைமுற்று. ஈண்டுத் தமயந்திக்காதலால் பெண்பாலைக் குறித்தது.

2‘பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில்
செல்லா தாகும் செய்யுமென் முற்றே.’

என்பது நன்னூல் விதியாகலான் இம்முற்று பலர்பாற் படர்க்கைப் பெயருக்கும் முன்னிலைப்பெயருக்கும் தன்மைப்பெயருக்கும் வாராதென்றமையால் மற்ற ஆண்பால், பெண்பால், ஒன்றன்பாற் படர்க்கைக்கு வருமென்பது உடன்பாடாகக் கொள்க. சொல்வீர் முன்னிலைப்பன்மை ஏவல்முற்று. எனக்கு என்னிடம் என்னும் பொருளது. ஈங்கு நான்கனுருபு எழனுருபுப்பொருளில் மயங்கி வந்தது. (22)

1. திருவாரூர் நான்மணிமாலை : 5.
2. நன்னூல் : 348.