பக்கம் எண் :

மூலமும் உரையும்453

நளன், கடலொடு கழறுதல்

356. போவாய் வருவாய் புரண்டு விழுந்திரங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய் - தீவாய்
அரவகற்றும் என்போல ஆர்கலியே ! மாதை
இரவகற்றி வந்தாய்கொல் இன்று.

(இ - ள்.) (நளன் கடலை நோக்கி) ஆர்கலியே - மிக்க ஓசையையுடைய கடலே !, விழுந்து போவாய் புரண்டு வருவாய்-(நீ, எழுந்து) விழுகின்றாய் போகின்றாய் புரள்கின்றாய் (திரும்ப) வருகின்றாய், நாவாய் குழற இரங்கி நடுங்குறுவாய் - உன் நடுவிடமெங்கும் அசைய அலையலையாக இரைச்சலிட்டுக்கொண்டு ஓவென்றலறி இரைந்து அலைகின்றாய், (உன்மேல் கப்பல்கள் அலைய ஓவென்னம் ஒலியுடன் இரைந்து அசைகிறாய்) தீ வாய் அரவு அகற்றும் என்போல - நெருப்பிடத்து அகப்பட்டுக்கிடந்த பாம்பை அதினின்றும் விலக்கியெடுத்துக் காப்பாற்றின என்னைப்போல, மாதை இரவு நேரத்தில் தன்னந்தனியாக விட்டுவிட்டு இன்றைக்கு (நீயும் இங்கு) வந்தாயோ ? (என்னைப்போல் அங்கு மிங்கும் செல்கின்றாய் ; புரள்கின்றாய் ; கதறுகின்றாய் ; நாவும் வாயும் குழற நடுங்குகின்றாய் ; பாம்பு கடித்ததால் என்நிறம் கருமையாக மாறி இருப்பதுபோல உன்னிறமும் கருமை நிறமாக இருக்கின்றதே ? என்றபடி.)

(க - து.) நளன் கடலைநோக்கி, ‘கடலே, போவாய், வருவாய், புரண்டு விழுந்திரங்குவாய்; ஆதலால் நீயும் என்னைப்போல உன் மனைவியை நள்ளிரவில் பிரிந்து இன்று இங்கு வந்தாயோ கூறுக?’ என்றான் என்பதாம்.

(வி - ரை.) நளன் கடலை நோக்கிக் கூறுவதாக அமைத்துள்ள தொடரில் போவாய் முதலிய சொற்கள், இருபொருள் நயந்தோன்ற நின்றமை தெளிக. நாவாய் - மரக்கலம். நாவும் வாயும் என்று உம்மைத் தொகையாகக் கோடலுமாம். நடுங்குறுதல் : ஒருசொல், அழுக்காறு என்பதுபோல. நடுங்குறுதல், கடலுக்கு அசைதல், நளனுக்கு நடுக்கங்கொள்ளுதல். தீவாய் அரவகற்றும் என்போல என்பதில் உருவுவமமாக நளன் பாம்புக் கடியால் அடைந்த கருநிறத்தைக் குறித்தது. கடல் கரிய நிறமுடையதாகலான் என்க. கடல் இயற்கையாகப் போவதும் வருவதும் அலைகள் இரைந்து ஒலித்தலும் உடையது. இங்கே இரக்கமிகுதியால் தன்னைப்போலவே இருப்பதாக நளன் கருதி,