பக்கம் எண் :

454நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

‘மாதை இரவகற்றி வந்தாய் கொல்’ என்று வினவுகின்றான். இவ்வாறே தன்னிலையைத் தான் காணும் பொருள்களிடத்துக் கேட்டுத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்தல் அவலமனநிலை கொண்டாரின் இயற்கையாதலால் இவ்வாறு வினவினான் என்க. இவ்வாறே இறைவன்பால் ஆரா அயரா அன்புகொண்ட காதலியொருத்தி, தன் கண்முன் காட்சியளிக்கும் கடலை நோக்கித் தனக்கு இரக்கங்கொண்டு தன்னைப்போல் உறங்காது இரவு முழுதும் விழித்துக்கொண்டு இருப்பதாகக் கழறுவதும் இதனோடொத்த கருத்தாக அமைந்திருத்தலின் அதனையும் ஈண்டுக் காட்டுதும்.

1‘ ..................... அயர்வேற்கிரங்கி
சூழ்ந்து கிடந்த கரைமேல் திரையெனும் கையெறிந்து
வீழ்ந்து கிடந்தல றித்துயி லாதிவ் விரிகடலே’

என்பது அது. தான் கடலைக் கண்டபோது, தன்னோடொத்த தன்மையாக இருந்தது அற்றைநாளேயாதலான் ‘இன்று’ என்றான் என்க. (23)

நளன், அயோத்தி நகரை அடைதல்

357. முன்னீர் மடவார் முறுவல் திரள்குவிப்ப
நன்னீர் அயோத்தி நகரடைந்தான் - பொன்னீர்
முருகுடைக்கும் தாமரையின் மொய்ம்மலரைத் தும்பி
அருகுடைக்கும் நன்னாட் டரசு.

(இ - ள்.) பொன்னீர் முருகு உடைக்கும் தாமரையின் மொய்ம் மலரை - பொன்னின் தன்மையான அழகையும் தன் சிறப்பால் தோற்கச் செய்கின்ற தாமரையின் மிக்க மலர்களை, தும்பி - வண்டுகளானவை, அருகு உடைக்கும் நல் நாட்டு அரசு - அருகிற் சென்று அதன் இதழ்களை விரிக்கின்ற நீர் வளம் செறிந்த நிடத நாட்டு வேந்தனான நளன், முன்நீர் மடவார் முறுவல் திரள் குவிப்ப - கடலானது பெண்களின் பற்கள் போன்ற முத்துக் கூட்டங்களை அலைகளால் ஒதுக்கிக் குவிக்கின்ற, நல்நீர் அயோத்தி நகர் அடைந்தான் - நல்லியல்பு மிக்க அயோத்தி நகரில் சென்று சேர்ந்தான்.

(க - து.)நளன் கடற்கரை வழியாகச் சென்று நல்லியல்பு பொருந்திய மக்கள் வாழுகின்ற அயோத்தி மாநகரைச் சென்றடைந்தான் என்பதாம்.

1. திருவாரூர்மும் : 30.