பக்கம் எண் :

456நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

இடையெழுத்தும் இறுதியில் வல்லெழுத்தும் அவைகள் மூன்றினும்
உகர உயிரும் சேர்ந்து மென்மையில் தோன்றி வன்மையில் முடிவதால் என்றுங் குன்றா இளமையும் அழகும் மணமும் இனிமையும் மிக்க இறைவனை ‘முருகு’ என்ற பெயரால் அமைத்து வழிபட்டனர் நம் பண்டைத் தமிழ்ச் சான்றோர். அம் முருகு என்னும் சொல்லை அழகென்ற பொருளில் ஈண்டமைத்தார் புகழேந்திய இப்புகழேந்தியார். தும்பி மலரை அருகுடைத்தல் - வண்டுகளானவை தேனைப்பருகுதற்குத் தன் கால்களால் அரும்பை நெகிழ்த்து விரித்தல். நளனுடைய நிடத நாட்டு வளங் கூறியவாறு. (24)

நளன், இருதுபன்னனிடம் போய்த் தன்னை அறிமுகப் படுத்தல்

358. மான்தேர்த் தொழிற்கும் மடைத்தொழிற்கும் மிக்கோனென்
றூன்தேய்க்கும் வேலான் உறர்நறவத் - தேன்தோய்க்கும்
தார்வேந்தற் கென்வரவு தானுரைமின் என்றுரைத்தான்

தேர்வேந்தன் வாகுகனாய்ச் சென்று.

(இ - ள்.) தேர்வேந்தன் வாகுகன் ஆய் சென்று - தேரூரும் மன்னனாகிய நளன் வாகுக னென்னும் பெயருடையவனாகப் போய் (அரசன் ஏவலாளரிடம்), ஊன் தேய்க்கும் வேலான் உயர் நறவம் தேன் தோய்க்கும் தார் வேந்தற்கு - பகைவர் உடலைக் குத்தி அழிக்கின்ற வேற்படை தாங்கியவனாகிய நறுமணமுள்ள தேன் பொருந்திய மலர் மாலையணிந்த உம் இருது பன்ன வேந்தனுக்கு, மான் தேர்த் தொழிற்கும் மடை தொழிற்கும் மிக்கோன் என்று - குதிரைகள் பூட்டிய தேரோட்டு கின்ற தொழில் வன்மையினும், சமையல் தொழில் வன்மையினும் சிறந்தவனென்று, என் வரவு உரைமின் என்று உரைத்தான் - என் வருகையைச் சொல்லுமினென்று (நளன்) கூறினான்.

(க - து.)நளன் வாகுகன் என்னும் பெயருடையனாக அயோத்தி நகருக்குச் சென்று, அங்கு அரசன் ஏவலரைக் கண்டு, ‘நான் தேரோட்டவும் மடைத் தொழில் செய்யவும் வல்லேன் என்று நும் அரசற்கு அறிவிப்பீர்’ என்றான் என்பதாம்.

(வி - ரை.) மான்-குதிரை. மடைத் தொழில்-உணவமைக்கும் தொழில். ஊன் - ஈண்டு உடலை உணர்த்திற்று.

1‘ஊன டைந்த உடம்பின் பிறவி’

என்றார், சேக்கிழாரும்.

1. பெரியபுராணம் : 2.