|
ஆற்றல் படைத்தவனாகவே இருத்தல்
கூடுமெனக் கருதினான். அதனால் அவன் கூறியவாறு
அவ்வவ் வேலைகளில் தேர்ச்சியுடையவனே யென்று
கொண்டு ‘தக்கானை இங்கே தருமின்’ என்றான்
என்க. தருமின் - அழையுங்கள் என்னும் பொருளது.
தருமின் என்பது முன்னிலை யேவற்பன்மை வினைமுற்று.
மின் : ஏவற்பன்மை விகுதி. உரைக்க என்பது
காரியப்பொருட்டாக வந்த இறந்தகாலச்
செயவெனெச்சம். நளன் தேர்த்தொழில் முதலிய
யாவினுஞ் சிறந்தானாகலான் ‘மிக்கான்’
என்றான். குறிப்பு வினைப்பெயர், ஈண்டு
இறந்தகாலங் காட்டிற்று. (26)
இருதுபன்னன், நளன் பெயர் முதலியவற்றை
வினவல்
360. பொய்யடையாச் சிந்தைப் புரவலனை நோக்கித்தான்
செய்ய முகமலர்ந்து தேர்வேந்தன் - ஐயாநீ
எத்தொழிலின் மிக்கனைகொல் யாதுன் பெயர்என்றான்
கைத்தொழிலின் மிக்கானைக் கண்டு.
(இ - ள்.) தேர் வேந்தன் கைத்
தொழிலின் மிக்கானை கண்டு - தேரையுடைய
மன்னனாகிய இருதுபன்னன் வேலைகளில் கைதேர்ந்து
உயர்ந்தவனான நளமன்னனைநோக்கி, பொய்யடையா
சிந்தை புரவலனை நோக்கி - உண்மையுடைய
மனத்தானாகிய நளன் தன்மையை அறிந்து, செய்ய முகம்
மலர்ந்து - அழகிய முகம் மகிழ்ச்சியால்
பொலிவுற்று, ஐயா - ஐயனே !, நீ எத்தொழிலின்
மிக்கனை உன் பெயர் யாது என்றான் - நீ எத்
தொழிலில் வல்லமையுடையை, உன் பெயர் என்னவென்று
வினவினான்.
(க - து.)இருதுபன்னன் நளனை நோக்கி,
அவன் சொல்லியனுப்பியன உண்மையென உணர்ந்து,
முகமலர்ச்சியுற்று, ‘ஐயனே ! நீ எந்தத் தொழில்
வல்லை ; உன் பெயர் என்ன?’ வென்று வினவினான்
என்பதாம்.
(வி - ரை.) நளன் மெய்ம்மையையே
கடமையாகக் கொண்டு நடப்பவனாதலான், ‘பொய்யடையாச்
சிந்தைப் புரவலன்’ என்றார். புரவலன்,
புரத்தலில் வல்லவன்; பாதுகாத்தலிற் சிறந்தவன்
என்பது பொருளாம். செய்ய - செம்மையுடைய, செம்மை
ஈண்டு அழகென்னும் பொருளில் வந்தது. ஒருவர்
ஒருவரைப் புதிதாகக் காணுங்கால் காணப்படுவோர்
நல்லியல்புடையராக இருப்பின், பார்ப்பவர்க்கு
அவரிடத்து ஓர் கவர்ச்சிநிலை ஏற்பட்டு அவர்பால்
அன்பை உண்டாக்கும்; அன்பு உண்டாயபோழ்து
மகிழ்ச்சி மிகும் ; அம்மகிழ்ச்சியின் அறிகுறி
முகத்தோற்றப்
|