|
யால் முல்லையும், அயோத்திநகர்
என்றமையால் மருதமும் என நால்வகை நிலமும்
பெறப்படும். புரோகிதன் நளனைத் தேடாத
இடமில்லையென்பது குறிப்பு. உலகமே நால்வகை
நிலத்துள் அடங்கும். அதனால், நளனை உலகெங்கும்
தேடினானெனக் கொள்க. எல்லா நிலங்களையும்,
படிப்படியாகக் கூறிய ஆசிரியர், ‘அடைந்தான்
அயோத்திநகர்’ என்றமையால் அதில் அரசன்
இருக்கின்றான் என்னும் குறிப்பை
உணர்த்தியவாறாம். (31)
புரோகிதன், ‘மனைவியைக் காட்டில்
விட்டுச்செல்லல்
அரசர்கட்குத் தகுமோ?’ எனல்
365. கானகத்துக் காதலியைக் காரிருளில் கைவிட்டுப்
போனதூஉம் வேந்தற்குப் போதுமோ - தானென்று
சாற்றினான் அந்தவுரை தார்வேந்தன் தன்செவியில்
ஏற்றினான் வந்தான் எதிர்.
(இ - ள்.) (புரோகிதனானவன்
அவ்வயோத்தியில்) கானகத்து காதலியை
கார்இருளில் கைவிட்டு - காட்டினிடத்தே
நள்ளிரவில் தன் மனைவியைத் தன்னந்தனியாக
விட்டுவிட்டு, போனதூஉம் வேந்தற்கு போதுமோ என்று
சாற்றினான் - பிரிந்து சென்ற நிலையும்
அரசனுக்குப் பொருத்தமாமோ என்று கூறினான், அந்த
உரை தார்வேந்தன் தன் செவியில் ஏற்றினான் -
நளமன்னன் அந்தச் சொற்களைத் தன் காதினுள்
ஏற்றுக்கொண்டு, எதிர்வந்தான் - (அவனுக்கு)
முன்னிலையில் வந்து சேர்ந்தான்.
(க - து.)புரோகிதனானவன் அங்கே ‘தன்
மனைவியைக் கரியஇருட்டில் தனியே விட்டுவிட்டுச்
செல்லுதல் அரசர்கட்குத் தக்கதாகுமோ?’ என்றான்.
அதை நளன் தன் காதில் கேட்டு, உடனே புரோகிதனுக்கு
முன்பாக வந்தான் என்பதாம்.
(வி - ரை.) கானகத்து என்றமையால்
ஆள்வழக்கற்ற வெப்பம் பொருந்தியதென்பது
தோன்ற நின்றது. கார்இருள் - கரிய இருட்டு.
வெளிச்சமே இல்லாத நேரம் என்னும் தன்மையைச்
சுட்டிற்று. காதலி என்பது அவள் தன் பேரன்புடைமை
தோன்ற நின்றது. காடு, அதினும் இருள், அதினும்
பேரன்புடையாள். இவ்வளவையும் கருதாது சென்றது
கொடுமை யென்பானாய் ‘வேந்தற்குப் போதுமோ’
என்றான். அச்சொல் காதில் கேட்பது நளனுக்குப்
பொருத்தமாகவில்லை. அச்சொல் சுடுவது
|