பக்கம் எண் :

மூலமும் உரையும்465

(இ - ள்.) (வாகுகனாகிய நளன் புரோகிதனைப் பார்த்து) தண்தரள பூதாம வெண்குடையான் - குளிர்ச்சி பொருந்திய முத்துக்களால் கோக்கப்பட்ட மாலைகளைக்கொண்ட வெண்கொற்றக் குடையையுடைய வீம மன்னனின், பொன்மகளை - திருமகள் போன்ற புதல்வியாகிய தமயந்தியை, வெவ்வனத்தே நீத்தான் என்று ஐ உறேல் நீ - கொடிய காட்டிடத்தே விட்டுவிட்டுச் சென்றானென்று கருதி ஐயப்படாதே நீ, ஒண்தொடியை உறக்கத்தே நீத்ததுவும் - ஒளிபொருந்திய வளையலையுடைய தமயந்தியை அவள் தூங்குங்கால் விட்டுப் பிரிந்ததும், பண்டை விதியின் பயனே காண் - முன்செய்த ஊழ்வினையின் பயனேயாகும் என்பதை அறிவாயாக.

(க - து.)வாகுகனாகிய நளன் புரோகிதனை நோக்கி, ‘தமயந்தியை அவள் உறங்குங்கால் அவள் கணவன் விட்டுப் பிரிந்தது முற்காலத்துச் செய்த ஊழ்வினையே; நீ அவளைக் கொடிய காட்டில் விட்டுச் சென்றானேயென்று ஐயப்படாதே’ என்றான் என்பதாம்.

(வி - ரை.) ஒண்தொடி - ஒளிபொருந்திய வளையலையுடையாள் எனப்பொருள் கொள்க. பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. பண்டை விதியின் பயன் என்பது,

1‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்’

என்பது தமிழ்மறை. ஒருவன் செய்த நல்வினையோ தீவினையோ அவனைத் தவறாது சென்று அதன் பயனை ஊட்டுமென்பது ஆன்றோர் கொள்கை. அந்த முறையில் நளன் தன் மனையாளிடத்து வெறுப்பற்றவனாக இருந்தும் காரணமின்றித் தமயந்தியைக் காட்டில் தனியே உறக்கத்தின்போது விட்டுச் சென்றதற்குக் காரணம் என்ன கூறுவது? ஆகவே விதியென்றான்.

அயோத்தி அண்ணலாகிய இராமனைக் காடுசென்று ‘ஏழிரண்டாண்டின் வா’ என்று கைகேசி சொற்றகாலை, இராமன் காடுசெல்லற்கு ஒருப்படாத அன்புடை இளவலாகிய இலக்குவன் சீற்றங்கொண்டு, ‘பெண்ணாட்டம் ஒட்டேன் இப்பேருலகத்துள்’ எனச் சினந்து வில்லெடுத்து நின்றான் ; அதுகாலை இராமன் போந்து ‘தம்பீ ! இஃதென்ன உனக்குச் சினம் ; நம் தாயின் குற்றமா நம்மைக் காட்டுக்குப் போகச் சொன்னது ; தந்தையின் குற்றமா வரங்கொடுத்தது ; விதியின் குற்றமென்று

1. திருக்குறள் : 319.
ந. - 30