பக்கம் எண் :

466நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

தேறுதல் மொழிகூறி, அவன் சினத்தை மாற்றி ஆற்றினான். இலக்குவனும் சினமாறி அமைதியடைந்தான். அது :

1‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மைஅற்றே
பதியின் பிழையன்று பரிந்து நமைப்புரந்தாள்
மதியின் பிழையன்று மகன்பிழையன்று மைந்த
விதியின்பிழை இதற்கென்னை வெகுண்ட தென்றான்’

இக்கருத்தொப்பவே நளன் வாகுகனாக மாறுகோலத்தோடிருந்தும் ‘விதியால் நிகழ்ந்தது ; நீ தமயந்தியை விட்டுப் பிரிந்ததைப்பற்றி ஐயமுறாதே’ என்று புரோகிதனிடம் கூறினானென்க.

தரளபூ தாமம் - முத்தாலாகிய அழகு பொருந்திய மாலை. வெண்கொற்றக் குடையில் ஓரங்களில் முத்துச் சரங்களைத் தொங்கவிடுவது வழக்கமாதலின், இவ்வாறு வீமன் சிறப்புக்கு உயர்த்துக் கூறினார். (33)

புரோகிதன் சென்றதும் தமயந்தி அவனை வினாவல்

367. எங்கண் உறைந்தனைகொல் எத்திசைபோய் நாடினைகொல்
கங்கைவள நாட்டார்தம் காவலனை - அங்குத்
தலைப்பட்ட லாறுண்டோ சாற்றென்றாள் கண்ணீர்
அலைப்பட்ட கொங்கையாள் ஆங்கு.

(இ - ள்.) கண்நீர் அலைப்பட்ட கொங்கையாள் - கண்களின் நீரானது அலைபோற் பெருக்கெடுத்தோடுகின்ற கொங்கைகளையுடையளாகிய தமயந்தியானவள், (புரோகிதனாகிய சுவேதனைக் கண்டபோது), எங்கண் உறைந்தனை-நீ எவ்வெவ்விடத்தே தங்கியிருந்தாய், கங்கை வளநாட்டார் காவலனை - கங்கைநீர்வளம் பெருக்கும் நிடதநாட்டுக்குரிய மன்னனை, எத்திசைபோய் நாடினை - எந்தெந்தத் திக்குகளெல்லாஞ் சென்று போய்த் தேடி வந்தனை, அங்கு தலைப்பட்ட ஆறு உண்டோ சாற்று என்றாள் - அந்த இடங்களிலெல்லாம் என் நாயகர் உனக்கு நேரே தென்பட்டதுண்டோ கூறுக என்று வினவினாள்.

(க - து.)‘ஐய ! நீ எங்கெங்குத் தங்கினை ? எந்தெந்தத் திசைகளெல்லாஞ் சென்று எம் வேந்தனைத் தேடினை ? அங்கே எங்கேனும் எம் கணவரைக் கண்டதுண்டோ சொல்லுக ?’ என வினவினாள் தமயந்தி என்பதாம்.

1. கம்ப, அயோத்தி, நகர்நீங்கு : 133.