|
(வி - ரை.) எ+கண் - எங்கண் ;
வினாவடியாகப் பிறந்த இடப்பெயர். கங்கைவளநாடு -
கங்கைநீர்வளம் பெருக்கும் நிடதநாடு.
கங்கையென்பது அதன் நீருக்காதலால் இடவாகு பெயர்.
காவலன் - காத்தற்றொழிலையுடையவன் : அரசன்.
1‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர்
நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்’
என்னும் வள்ளுவர் மறையில் காவலன்
வேந்தன் என்பதை உணர்த்தல் அறிக. அங்கு:
சேய்மைச் சுட்டு அஃது அவன் தேடிய
அவ்வவ்விடங்கட்கு ஆயிற்று. தலைப்படுதல் -
நேர்படல் : சந்தித்தல். 2‘தலைப்பட்டார்
தீரத்துறந்தார்’ என்னும் திருவள்ளுவத்தானும்
உணர்க.
அன்புகொண்டார் துன்பமோ இன்பமோ
கொண்டவிடத்து ஒருவர்க்கொருவர் தம்
உள்ளக்கசிவால் துன்பக்கண்ணீரும்
இன்பக்கண்ணீரும் உகுப்பது இயற்கை.
அவ்வியற்கையினால் தமயந்தி தன் காதற்கணவன்
தன்னை விட்டுப் பிரிந்துசென்ற நிலையையும், தான்
அவனைவிட்டுப் பிரிந்து வாழ்கின்ற அவல
நிலையையும் எண்ணி யெண்ணிக் கண்களில் நீர்பெருக
அழுது கொண்டே இருந்தாளாதலின், அவள் கண்கள்
துன்பக் கண்ணீர், உகுத்தன ; இதனை, ‘கண்ணீர்
அலைப்பட்ட கொங்கையாள்’ என்றார். கண்ணீர்
அலைப்படலாவது, நீர் அலைபோல் பெருகி வழிதல்.
கொங்கைமுற்றத்துக்கண் நீர் பெருகியோடுதலை
இவ்வாறு கூறினார். அன்புகொண்டவரின்
துன்பத்தையோ இன்பத்தையோ கண்டவிடத்துக்
கண்ணீர் வாருமென்பது நாம் கண் கூடாகக் கண்டுவரும்
இயற்கையுமாகும். இதனை,
3‘அன்பிற்கும் உண்டோ
அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்’
என வள்ளுவரும்,
4‘மெய்தான் அரும்பி
விதிர்விதிர்த்துன்
விரையார்கழற் கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி’
என்று பத்திச் சுவைகனி சொட்டச்
சொட்டப் பரமனடி பேணி நின்ற மணிமொழிப்
பெருமானும் அருள்கின்றவாற்றால் அறியப் பெறும்.
1, 2, 3. திருக்குறள் : 560; 348; 71.
4. திருவாசகம், திருச்சதகம் : 1.
|