லுள்ள, இந்துமுறி என்று இயம்புவார் -
பிறைத்துண்டமாகிய நெற்றியெனக் கூறுவர்.
(க - து.) தமயந்தியின் நெற்றியாகிய
பிறைத்துண்டம், மன்மதன் தன் அம்புவரிசைகளைத்
தீட்டுகின்ற இடனாகும் என்பதாம்.
(வி - ரை.) செந்தேன் மொழியாள்,
கேட்டார்க்கு இன்பஞ்செய்யும் இனியமொழியாள்
எனத் தமயந்தியின் சொல் சிறப்புக் கூறியவாறு.
அளகம் - கூந்தல்; பந்தி - வரிசை. தமயந்தியின்
கண்கள், அடிக்கடி பிறழ்ந்துகொண்டிருப்பதாலும்
நெற்றிப் பக்கலிலேயே கண்கள் உளவாகலினாலும்
அவைகளை மன்மதன் தீட்டுவதாகக் குறித்தார்.
தீட்டுதல் இவள் கண்களின் செவ்வியைக்
காண்டொறும் காண்டொறும் ஆடவர்கள் அகலாது
நிற்றற்குரிய செவ்வியாக்குதல். எனவே,
தமயந்தியின் கண்கள், நெற்றிப்பக்கலில்
அமைந்துள்ள கூந்தல்வரிசை, நெற்றி இவைகளின்
சிறப்புக்கூறியவாறு. பந்தி, இந்து என்பன
வடசொற்கள். ஏ வாளி எனக்கொண்டு அம்புகள் எனப்
பொருள் கூறலுமாம். ஒருபொருட் பன்மொழி. (35)
நளன், அன்னத்தை நோக்கி ‘உனக்கும்
அவட்கும்
தொடர்பு என் ?’னென வினவல்
34. அன்னமே நீஉரைத்த அன்னத்தை என்ஆவி
உன்னவே சோரும் உனக்கவளோ - டென்ன
அடைவென்றான் மற்றந்த அன்னத்தை
முன்னே
நடைவென்றாள் தன்பால் நயந்து.
(இ - ள்.) அந்த அன்னத்தை - (இவ்வாறு
கூறிய) அந்த அன்னப்பறவையை, முன்னே நடைவென்றாள்
தன்பால் நயந்து-நடைச்சிறப்பினால் மிக
இளம்பருவத்திலேயே வெற்றிபெற்றவளாகிய
தமயந்தியின்மேல் விருப்பம் வைத்து, அன்னமே -
அன்னப்பறவையே ! நீ உரைத்த அன்னத்தை - நீ கூறிய
அன்னத்தை ஒத்தவளை, உன்னவே என் ஆவி சோரும் -
நினைக்கும்போதே என் உயிர் வாட்டமுறுகின்றது,
அவளோடு உனக்கு என்ன அடைவு என்றான் - அவளுடன்
உனக்குத் தொடர்பு என்னவென்ற (நளன்) கேட்டான்.
(க - து.) நளன், ‘அன்னமே ! உனக்கும்
தமயந்திக்கும் என்ன சம்பந்தம்?’ என்று
அன்னத்தை நோக்கிக் கேட்டான் என்பதாம்.
|