(வி - ரை.) அன்னமே: விளி.
அன்னம்போன்ற தமயந்தியை ‘அன்னம்’ என்றது
உவமவாகு பெயர். அவள்தன் அழகைக் கூறியதைக்கேட்ட
நளனுக்கு அவள்பாற் காதல் கிளர்த்தெழுந்தது ;
அதனால், அவன் நெஞ்சம் அழிந்து நின்றான்.
ஆகலான், ‘ஆவி உன்னவே சோரும்’ என்றான். ‘அவளைப்பற்றி
நீ இவ்வளவு எடுத்துரைக்கும் தன்மையிருப்பதால்
உனக்கு அவள்பால் என்ன தொடர்புண்டு’ என வினவி,
அவள்தன் மற்ற நிலைகளையெல்லாம் நன்கு
அறிந்துகொள்ள விரும்பியவனாய், ‘என்ன அடைவு?’
என்று கேட்டான். நடை வெல்லுதல் அன்னத்தின்நடை
தமயந்தி நடைக்கு முன்னர் ஒப்பாகாமல்
பின்னிடல். (36)
அன்னம் தமயந்தியின் நடையைக்கற்க
அவள்பால் வந்ததாகக் கூறல்
44. பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள்
யாமவள்தன்
மாமனைவாய் வாழும் மயிற்குலங்கள் - காமன்
படைகற்பான் வந்தடைந்தான் பைந்தொடியாள் பாத
நடைகற்பான் வந்தடைந்தேம் நாம்.
(இ - ள்.) காமன் படைகற்பான் வந்து
அடைந்தான் - மன்மதன் (அவள் தன் கண்
அம்பைக்கொண்டு) அம்பெய்து பழகுந்தொழிலை
கற்கும்பொருட்டு அங்குவந்து சேர்ந்தான், நாம் -
நாங்கள், பைந்தொடியாள் பாதநடை கற்பான் வந்து
அடைந்தேம் - (அவனைப்போன்றே) அப்பசும்பொன்
வளையலணிந்தவளுடைய கால்நடையைக்
கற்றுக்கொள்ளும் பொருட்டுடாக (அங்கு) வந்து
சேர்ந்தோம், யாம் பூ மனைவாய் வாழ்கின்ற புள்குலங்கள் - யாங்கள்
மலர்மாளிகைகளில் வாழ்ந்து வருகின்ற
பறவை இனங்கள், அவள்தன் மாமனைவாய் வாழும் மயில்
குலங்கள் - (ஆனாலும்) அவளுடைய பெரிய மாளிகையில்
இருக்கின்ற அவளின் சேடிப்பெண்கள் (என்னும்படி
அவளோடு பழக்கங்கொண்டுள்ளோம்.)
(க - து.) ‘ தமயந்தியிடம் காமன்
படைத்தொழில் கற்கவந்தான் ; நாங்களும்
அவள்பால் நடை கற்க வந்தோம்’ என்று அன்னம்
நளனிடம் கூறிற்று.
(வி - ரை.) பூமனை - பூவாகிய மனைஎன
விரிதலால் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை.
மனைவாய் வாழும் புடகுலங்கள்;
|