பக்கம் எண் :

மூலமும் உரையும்49

ஏழாம் வேற்றுமை, பிறிதின்கிழமையில் வந்தது. பூவெனப் பொதுப்படக் கூறினாரேனும் சிறப்புப்பற்றி இங்கே செந்தாமரை மலரையே குறிப்பதாயிற்று. என்னை?

1‘பூவீற்றிருந்த பொலன்மா மாதொடு’

எனச் சிந்தாமணியினும்,

2‘பூவெனப் படுவது பொறிவாழ் பூவே’

என நால்வர் நான்மணிமாலையினும்,

3‘பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை’

எனத் தேவாரத்தும் மற்ற நூல்களினும் வருதல்கொண்டு தெளியலாம். மன்மதன் தமயந்தி மங்கைப்பருவமெய்திய கால முதல் அவள் கட்பார்வை கண்டார் மனத்தை விரைந்துபற்றும் தன்மையுடையதாயிருப்பதால் தான் விடும் பாணமும் ஆண்மை முகிழ்த்த ஆடவர்தம் மார்பிற் பாய்ந்து அவர்தம் நெஞ்சைக் கலக்கித் தம் வயமிழந்து நிற்கும் தன்மையை எய்த விரும்பி இவள் தன் கண்ணைப் பார்த்துப்பார்த்து அதைப்போல் தன் அம்பைத்தீட்டி அராவ முற்பட்டான் என மொழிவாராய்ப் ‘படைகற்பான் வந்தடைந்தான்’ என்றார். கண்ணின் இயல்பை,

4‘பூவொத் தலமரும் தகைய ஏவொத்
தெல்லாரும் அறிய நோய்செய் தனவே
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஒப்புவாள் பெருமழைக் கண்ணே’

எனக் குறுந்தொகையினும் வருதல் காண்க. படை - படைத்தன்மை: காரணவாகு பெயர். மயில்போன்ற சாயலையுடைய பெண்களை ‘மயிற்குலங்கள்’ என்றது ஆகுபெயர். முன்னரும் ‘நல்ல மயிற்குழாம்’ என்றதூஉங் காண்க. படை - படுத்தல்: கொல்லுதல் தொழிலையுடையது; நடை, கொடை, விடை, மடை என்பனபோன்ற ஐகார விகுதிபெற்ற தொழிற்பெயர். அன்னநடையைப் பெண்கள் நடைக்கு உவமங்கூறுதல் மரபு. அவள் நடையும் அதன் நடையை ஒத்ததே. ஆயினும் தமயந்தியின் நடை அந்தநடையை விஞ்சிநிற்பதால் அன்னம் ‘நடைகற்பான் வந்தடைந்தாம் நாம்’ என்று அவள் தன் கூந்தல் கண் முதலிய உறுப்புக்களின் அழகைச் சொல்லியதோடமையாது அவள் தன் நடையழகைக்கூறித் தான் அங்குவந்து சேர்ந்ததற்குரிய காரணத்தையும் அன்னம் எடுத்துரைத்தவாறாம். (37)

1. சீவகசிந், நாமகள்: 1. 2. நால்வர் நான்: 40.
3. திருநாவு, தேவா : 4. குறுந்தொகை : 72.
ந. - 4