நளன், தமயந்திபால் காதல்கொள்ளல்
45. இற்றது நெஞ்சம் எழுந்த திருங்காதல்
அற்றது மானம் அழிந்ததுநாண் - மற்றினிஉன்
வாயுடைய தென்னுடைய வாழ்வென்றான் வெங்காமத்
தீயுடைய நெஞ்சடையான் தேர்ந்து.
(இ - ள்.) இற்றது நெஞ்சம் - (இவ்வாறு
அன்னங் கூறியவைகளை யெல்லாம் கேட்ட நளனுக்கு)
மனநிலை அழிந்தது, இரும் காதல் எழுந்தது -
(தமயந்தியை நினைந்து நினைந்து) மிக்க காதல்
மேலோங்கியது, மானம் அற்றது - பெருமை நீங்கிற்று,
நாண் அழிந்தது - வெட்கம் இல்லையாயிற்று, வெம்
காம தீ உடைய நெஞ்சு உடையான் - கொடிய காமமென்னும்
தீப்பற்றிய மனமுடையனாகிய அவன், தேர்ந்து -
சற்றே அறிவு தெளிந்து, மற்று இனி என்னுடைய வாழ்வு -
பின்பு என் உயிர் வாழ்க்கை, உன் உடைய வாய்
உடையது என்றான் - உன்னுடைய வாயின் சொற்களின்
இடமாக இருக்கின்றதென்று கூறினான்.
(க - து.) நளன், அன்னத்தை நோக்கி ‘என்
வாழ்வு உன் வாய்ச்சொல்லில்தான் இருக்கிறது’
என்றான்.
(வி - ரை.) நெஞ்சம் இறுதல் - மனம்
தன்நிலை தடுமாறல். இதனைப் பிறசான்றோர்கள் ‘கையறு
நெஞ்சம்’ என்பர். கண்ணகியார், தன் கணவனைப்
பிரிந்துறைந்திருந்த காலத்தில் யாதொரு
கோலமுங் கொள்ளாராய் அவலமுற்றிருந்த நிலையைக்
கூறப்போந்த இளங்கோவடிகளார்,
1‘கையது நெஞ்சத்துக் கண்ணகி’
என்று படம் வரைந்ததும் நோக்குக. இராவணன்பால்
சூர்ப்பநகை வந்து, சீதையின் அழகுருவையெல்லாம் கூறி
அவற்குக் காமத்தீ மூட்டியகாலத்தில் அவன் பிறவற்றையெல்லாம்
மறந்து சீதையைமட்டும் மறவாத நிலையன் ஆயினான்
என்று கூறப் போந்த கம்பநாடர்,
2‘கரனையும் மறந்தான் தங்கை
மூக்கினைக் கடிந்து நின்றோன்
உரனையும் மறந்தான் உற்ற பழியையும்
மறந்தான் வெற்றி
அரனையும் கொண்ட காமன் அம்பினான்
முன்னைப் பெற்ற
வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை
மறந்தி லாதான்’
1. சிலப், 4 : 57. 2. கம்பராமா, மாரீசன் :
85.
|