பக்கம் எண் :

மூலமும் உரையும்471

(க - து.)மறையவன் சென்று அயோத்தியரசனை நோக்கி, ‘வேந்தே! எங்கள் வீமமன்னன் தன் மகள் தமயந்திக்கு இரண்டாஞ்சுயம்வரம் என்று பறையறைவித்துள்ளான்; அது நாளையே நடைபெறவிருக்கின்றது’ என்றான் என்பதாம்.

(வி - ரை.) எம்கோன் - எம் வேந்தன். மறையவன் கூற்று. உரிமை பாராட்டி எம்கோன் என்றான். அங்கு என்பது சேய்மைச் சுட்டாய் விதர்ப்பநாட்டை உணர்த்திற்று. ஓர் - ஒரு என்பதன் விகாரம். ஒப்பற்ற என்று பொருள்கொண்டு திருமண நிகழ்ச்சியை அறிவித்தலான் சிறப்புப்பற்றிக் கூறினானெனக் கொள்ளலுமாம். அறைவித்தல் : பிறவினை. செங்கோல் : செவ்விய வளைவில்லாத கோல்போன்றதென்னும் பொருட்டாய் முறையொடுபட்ட நாட்டாட்சிக்கு ஆயிற்று ; ஆதலால், உவம
வாகுபெயர். இருதுபன்னன் ஆட்சிமுறையைக் கண்ட மறையோன், அவன் ஆட்சிச்சிறப்பை வியந்து, ‘செங்கோலாய் !’ என விளித்தான். அண்மையில் நிகழவிருக்கின்றதென அறிவிப்பானாய் ‘அந்நாளும் நாளை அளவு’ என்றான், கேட்பவன் உள்ளம் எந்நாளோ என்று ஐயுறாமற் பொருட்டு. தமயந்தி மீண்டும் சுயம்வரம் நடத்துதற்கு நைடத நூலாசிரியர், தமயந்தி கன்னிப் பருவமெய்தியதாகக் காரணங் கற்பித்துரைக்கின்றார். அது :

1‘நாட்டம் மூன்றுடை நாயகன் வரத்தினால் நங்கை
மீட்டும் கன்னிகை ஆயினாள் சுயம்பரம் விழைந்தாள்’

என, மறையோன் கூற்றாக இருதுபன்னனுக்கு அறிவித்தாக வரும் தொடரும் அறிக. (37)

தமயந்திக்கு இரண்டாஞ் சுயம்பரமெனக்கேட்ட
இருதுபன்னன் கூறல்

371. வேத மொழிவாணன் மீண்டும் சுயம்பரத்தைக்
காதலித்தாள் வீமன்றன் காதலியென் - றோதினான்
என்செய்கோ மற்றிதனுக் கென்றான் இகல்சிறும்
மின்செய்த வேலான் விரைந்து.

(இ - ள்.) இகல்சீறும் மின்செய்த வேலான் - பகைவரைச் சினக்கின்ற ஒளிவிடுகின்ற வேற்படையேந்திய இருதுபன்னன்,

1. நைடதம், கலிநீங்கு : 2.