|
னாகி ‘இச்சொல் சொல்லப்படுமோ’
என்றான். ஓகாரம் சொல்லுதல் ஒண்ணாது என்னும்
பொருளில் வருதலால் எதிர்மறை. (39)
இருதுபன்னன், தமயந்தி சுயம்பரமாலை முன்
தனக்கே
கிடக்கவேண்டியதெனல்
373. என்மேல் எறிகின்ற மாலை எழில்நளன்றன்
முன்னே விழுந்ததுகாண முன்னாளின் - அன்னதற்குக்
காரணந்தான் ஈதன்றோ என்றான் கடாஞ்சொரியும்
வாரணந்தான் அன்னான் மதித்து.
(இ - ள்.) கடாம் சொரியும் வாரணம்
அன்னான்-மதநீரைப் பொழிகின்ற ஆண்யானையை
ஒத்தவனான இருதுபன்னன், என் மேல் எறிகின்ற மாலை -
தமயந்தியினால் என்மேல் வீசியெறியப் பட்ட
சுயம்வர மணமாலை, எழில் நளன் முன்னே விழுந்தது
காண் முன்னாளின் - அழகு பொருந்திய நளன்மேல்
முன்சுயம்பரம் நாளிற்போய் விழுந்தது என்று அறிக
(வாகுகனே), அன்னதற்கு காரணம்தான் ஈது அன்றோ
என்றான் மதித்து - அப்படி நான் எண்ணுதற்குரிய
காரணமும் இவ்விரண்டாஞ் சுயம்வரமே
இருக்கின்றதல்லவா எனப் புரோகிதன் கூறியதை
ஆராய்ந்து கூறினான்.
(க - து.)இருதுபன்னன் நளனை நோக்கி,
‘தமயந்தி முதற் சுயம்வர காலத்தில் எறியப்பட்ட
சுயம்பர மணமாலை எனக்குக் கிடைப்பதாக இருந்தது ;
அது தவறி நளன்மேல் போய் விழுந்தது ; அதற்குக்
காரணம் இவ்விரண்டாஞ் சுயம்வரமே’ என்று
கூறினான் என்பதாம்.
(வி - ரை.) எம்மேல் எறிகின்ற
மாலை என்ற தொடருக்கேற்ற கருவிப்பொருளாகத்
தமயந்தி என்னும் சொல் வருவித்துரைக்கப்பட்டது.
எறிகின்ற - எறிந்த என்னும் பொருளில் இயல்பாக
வந்த கால வழுவமைதி. எழில் நளன் - தோற்றமிக்க
நளன் என்னலுமாம். முன் என்பது அவன்மேல் என்னும்
பொருளில் வந்தது. இருதுபன்னன் தன்
தேர்ச்சாரதியாகிய
வாகுகன் ‘கற்பினாள்..........சொல்லப்படுமோ
இச்சொல்’ என்று கேட்ட கேள்விக்கு நேர்
மறுமொழி கூறாது இருதுபன்னன் காமமிக்கவனாய் ‘என்மேல்........முன்னே
விழுந்தது காண்’ என்று விடை வழுவாகக் கூறியது,
விரைவில் தேர்கொணருக
|