பக்கம் எண் :

476நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

நெருங்கிய கூந்தலையுடைய தமயந்தி. நளனுக்குத் தமயந்தி மறு சுயம்வரம் வைத்தாளென்று கேட்டதும், அதற்கு இருதுபன்னன் தனக்கு முன்சுயம்வர காலத்தில் கிடைக்கவேண்டிய மணமாலை நளன் கழுத்தில் தவறி விழுந்ததென்று சொன்ன சொல்லும் துன்புறுத்தித் தன் மனத்தை அலைப்ப, அதனால் வாகுகன் பலவாறாக எண்ணி வருந்தினானென்று கொள்க. தன் மரபுக்கு ஒவ்வாத வார்த்தையாவது கற்புடைப்பண்பினளாகிய தமயந்தியின் குலமுறைக்கு ஏற்காத சொல். அஃதாவது கற்புடையார் கனவினும் கருதாத மறு சுயம்பரம் என்னுஞ்சொல். கொல் : ஐயப்பொருள். இது என்பது இச்சொல் என்பதைக் குறித்த சுட்டு. (41)

வாகுகன், இருதுபன்னனுக்குத் தேரோட்டிச்செல்லலே
தன் கடன் என எண்ணல்

375. காவலனுக் கேவற் கடன்பூண்டேன் மற்றவன்றன்
ஏவல் முடிப்பென் இனியென்று - மாவைக்
குலத்தேரில் பூட்டினான் கோதையர்தம் கொங்கை
மலர்த்தேன் துளிக்குந்தார் மன்.

(இ - ள்.) கோதையர் தம் கொங்கை - மங்கையர்களின் கொங்கை முற்றத்திடத்தே, மலர்த்தேன் துளிக்கும் தார் மன் - தன் மலர்களிலுள்ள தேனைச் சொரிகின்ற மாலையணிந்த மார்பினனாகிய நளமன்னன், காவலனுக்கு ஏவல் கடன் பூண்டேன் - இவ்வயோத்தி வேந்தனாகிய இருதுபன்னனுக்கு நான் பணி செய்யுங் கடமையை மேற்கொண்டுள்ளேன், ஆதலால், அவன் ஏவல் முடிப்பென் இனி என்று - இனிமேல் அவன் கட்டளைப்படி செய்து முடிப்பேனெனக்கருதி, மாவை குலத்தேரில் பூட்டினான் - குதிரைகளைச் சிறந்த தேரில் பூட்டிக்கொண்டு வந்து நிறுத்தினான்.

(க - து.)வாகுகனானவன், அரசனுக்குப் பணி பூண்ட நான், இன்னும் எண்ணிக்கொண்டிருப்பது தகாது, இதோபோய் அவன் கட்டளைப்படி செய்வேனெனக் கருதிக் குதிரைகளைத் தேரிற் பூட்டிக்கொண்டு வந்து நிறுத்தினான் என்பதாம்.

(வி - ரை.) காவலனுக்கு என்பதில் நான்கனுருபு நேர்ச்சிப் பொருளில் வந்தது. கடன் - கடமை. செய்யவேண்டிய முறை. மா - குதிரை. குலத்தேர் - உயர்ந்த தன்மையிற் செய்யப்பட்ட