பக்கம் எண் :

480நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

1‘குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபிற் கோவலன் போல
இளிவாய் வண்டினொ டின்னிள வேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகு’

என்று உவமை கொடுத்துக் கணிகையாருடன் கூடி வாழும் கயமைப்பண்பைக் கடிந்து கூறி, உலகமாந்தர்க்கறிவுரை புகட்டுமாற்றால் அறியலாம். சந்தம் - அழகு. விரை - மணம். அழகும் மணமும் பொருந்தியதார் என மாலைக்கு அடைகொடுத்துரைத் தனரேனும், தமயந்தியின் புற அழகையும் உள்ளழகாகிய கற்பு அன்பு நாண் ஒப்புரவு முதலிய உயரிய குணங்களையும் உரைத்தவாறாம். தன் மனத்தே நளன் தேர்கின்ற செயலாவது, ‘கற்புடையாள் கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றன்றேயெனப் போற்றுவரன்றோ ? கற்புடைப்பெண்டிர் பிற ஆடவர் நெஞ்சிற் புகாரன்றோ ? அப் பெண்டிரும் பிறரைக் கனவினும் கருதாரன்றோ ? மீண்டுஞ் சுயம்வரமா ? திருமணமா?’ எனப் பலவாறாகச் சிந்தித்த நிலை. ஊர்தல் - செலுத்தல். பிறவினைப் பொருளில் வந்தது. (44)

இருதுபன்னனுடைய மேலாடை விழ, அதை எடுக்குமுன்
தேர் பத்துக்காதம் செல்லல்

378. மேலாடை வீழ்ந்த தெடுவென்றான் அவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே - தோலாமை
மேல்கொண்டான் ஏறிவர வெம்மைக் கலிச்சூதின்
மால்கொண்டான் கோல்கொண்ட மா.

(இ - ள்.) தோலாமை மேல் கொண்டான் ஏறிவர - வெற்றி மிக்கவனான இருதுபன்னன் ஏறிவருவதற்கு, வெம்மை கலிச்சூதின் - கொடுமை பொருந்திய கலியின் வஞ்சமுள்ள சூதாட்டத்தின்மீது, மால்கொண்டான் கோல்கொண்ட மா - மயக்கங் கொண்டவாகுகனாகிய நளமண்ணன் முட்கோல் கொண்டு முடுக்கி ஓட்டிய குதிரைகள், மேல் ஆடை வீழ்ந்தது எடு என்றான் - (இருதுபன்னன்) தன் மேலாடை கீழே விழுந்துவிட்டது அதனை எடுவென்று வாகுகனை நோக்கிக் கூறினான், அவ்வளவில் - அது சொல்லி முடிப்பதற்குள், நால் ஆறுகாதம் நடந்தது - பத்துக்காத தூரம் பறந்து சென்றன (என்றான்).

1. சிலப், 5:200 - 3.