பக்கம் எண் :

மூலமும் உரையும்481

(க - து.)நளன் ஓட்டிச் செல்கின்ற தேர்மேல் இருக்கின்ற இருதுபன்ன மன்னன், ‘என் மேலாடை கீழே வீழ்ந்துவிட்டது ; அதனையெடுத்துத் தருக’ வென்று வாகுகனை நோக்கிக் கூறினான் ; அதற்குள் தேரிற் பூட்டியிருக்கும் குதிரைகள் பத்துக்காத தூரம் பறந்து சென்றன (என்றான்) என்பதாம்.

(வி - ரை.) மேல் ஆடை - தோள் உத்தரீய ஆடை. விழுந்தது: வீழ்ந்ததென முதனீண்டது. நால் ஆறுகாதம்: நாலும் ஆறும் கூடிய காதமெனப் பொருள் கொள்க. எனவே பத்துக் காதம்: உம்மைத்தொகை எண்ணுப்பொருளில் வந்தது. நால் ஆறு எனக்கொண்டு நாலாறு இருபத்து நான்கெனப் பெருக்கிப் பொருளுரைப்பர் சிலர். அதுபொருந்தாது. நைடத நூலினும் பத்து யோசனையென்றே குறிப்பதும் கருதத்தக்கது. காதத்தை யோசனையெனக் கொண்டனர்போலும் ! அதையும் காட்டுதும்:

1‘முத்த வெண்குடை வேந்தர்கோன் முழவுறழ் தடந்தோள்
உத்த ரீயமந் நெறியிடை வீழ்தலும் உணர்ந்து
தத்து வாம்பரி நிறுவியத் துகில்தரு கென்னப்
பத்து யோசனை கடந்தது தேரெனப் பகர்ந்தான்.’

யோசனை நூறுகல் தொலை என்றும், காதம் பத்துக்கல் தொலை
என்றும் கூறுவர். ஒவ்வோராசிரியரும் அவ்வவர் கொண்ட குறிக்கோள்களுக்கு ஒப்பக் கூறுவர் போலும் ! தோலாமை - தோல்வியடையாத தன்மை; வெற்றிமிக்க நிலை: இருதுபன்னன் சிறப்பு. தன் அரசச்செல்வமும் புகழும் பெருமையும் இழந்து இன்று ஓர் தேரோட்டியாய் இருக்க நேர்ந்த தீயூழை ‘வெம்மைக் கலிச்சூதின் மால் கொண்டான்’ என்றார். கோல் - தாற்றுக் கோல். அக்கோல்கொண்டு குதிரைகளை ஓட்டுகின்றானாகலான் ‘கோல் கொண்ட மா’ என்றார். மா: பலபொருள் குறித்த உரிச்சொல். ஈண்டுக் குதிரைக்கு வந்தது. (45)

இருதுபன்னன், ஒரு தான்றி மரத்தின் காய்களை இவ்வளவெனல்

379. இத்தாழ் பணையில் இருந்தான்றிக காயெண்ணின்
பத்தா யிரங்கோடி பாரென்ன - உய்த்ததன்பால்
தேர்நிறுத்தி எண்ணினான் தேவர் சவைநடுவே
தார்நிறுத்தும் தோள்வேந்தன் தான்.

1. நைடதம், கலிநீங்கு : 11.
ந. - 31