|
(இ - ள்.) (இருதுபன்னன் நளனை
நோக்கி) இத்தாழ் பணையில் இரும்தான்றிக் காய்
எண்ணின் - இந்தத் தாழ்ந்த கிளையில்
பெரியதான்றி மரத்தின் காய்களைக்
கணக்கிட்டுரைத்தால், பத்து ஆயிரம் கோடி பார்
என்ன - பதினாயிரங்கோடியாகும் (10,00,00,00,00,00) நீ
இதை எண்ணித் தெரிந்துகொள் என்று கூற, தேவர் சவை
நடுவே தார் நிறுத்தும் தோள் வேந்தன் - தேவர்கள்
முதலிய யாவரும் கூடியிருந்த சுயம்பர மண்டபப்
பேரவையிலே பிறர் எவருக்கும் கிட்டாதவாறு தனக்கே
பெற்ற மணமாலையணிந்த தோள்களையுடைய
நளமன்னனானவன், அதன்பால் தேர் உய்த்து நிறுத்தி
எண்ணினான் - அந்தத் தான்றி மரத்தின் அருகில்
தேரைச்செலுத்தி நிறுத்திக் காய்களை யெண்ணிக்
கணக்கிட்டான்.
(க - து.)இருதுபன்னன் நளனை நோக்கி,
‘வாகுக ! இதோ பார் இத்தான்றி மரத்தின்
கிளையொன்றில் பதினாயிரங்கோடி காய்கள்
இருக்கின்றன, நீ காண் என்றான் ;’ நளன் தேரை
மரத்தின் அருகே கொண்டு நிறுத்திக் காய்களை
எண்ணிக் கணக்கிட்டான் என்பதாம்.
(வி - ரை.) இத்தாழ்பணை யென்பதற்கு
இந்தப் பள்ளமான வயலிடத்துள்ள என்று பொருள்
கூறுவாருமுளர். அதற்கோர் பொருட் சிறப்பின்மை
உணர்க. இரும் - பெரிய. தான்றி: ஒருவகை மரம்.
இருதுபன்னன் தான் கற்ற அரிய விஞ்சைத்
திறத்தினால் எண்ணிக்கணக்கிட்டுக் கூறாது
எண்ணாமலே பார்த்த அளவிற் கூறினா னாகலான் ‘எண்ணில்......பார்’
என்றானென்றார். பத்தாயிரங்கோடி மிக்க
எண்ணலளவை. அதனை விரைவில் எண்ணிக்கணக்கிடல்
அரிதாகலான் தேரை நிறுத்தியே
எண்ணவேண்டுவதாயிற்று. இதனைத் ‘தேர் நிறுத்தி
எண்ணினான்’ என்றார். தேவர் சவையென்பதில்
உள்ள இறந்தது தழுவிய எச்சவும்மை விகாரத்தால்
தொக்கது. அவ்வும்மை விரித்துப்பொருள்
கொள்ளப்பட்டது. தமயந்தி சுயம்வரத்
திருமணத்துக்குத் தேவர்களும்
விரும்பிவந்திருந்தனராதலின்
அப்பேரவையாரெல்லாம் வெள்கி மனஞ்சுளிக்கத்
தனக்கே மணமாலை பெற்ற நளன் சிறப்புத்தோன்ற
அவன் தோள்களைப் பாராட்டி ‘தார் நிறுத்தும்
தோள் வேந்தன்’ என்றார். தார் நிறுத்துதல் ;
மாலையை நிலைபெறச் செய்தல். அஃதாவது, இம்மாலை
நளமன்னனுக்கே உரியது ; வேறுயாருக்கும் பெற இயலாதது ;
அப்பேறு கிட்டியது, தோள்களுக்கன்றி வேறு
உறுப்புக்கட்கு இல்லை யென்பதை உணர்த்துவதற்கே
தோளின்மேல் வைத்துக்கூறினார். ஏயும் தானும்
அசைநிலைகள். (46)
|