|
இருதுபன்னன், வாகுகனை நோக்கிக் கூறுதல்
380. ஏரடிப்பார் கோலெடுப்ப இன்தேன்தொடை பீறிக்
காரடுத்த சோலைக் கடல்நாடன் - தேரடுத்த
மாத்தொழிலும் இத்தொழிலும் மாற்றுதியோ என்றுரைத்தான்
தேர்த்தொழிலின் மிக்கானைத் தேர்ந்து.
(இ - ள்.) ஏர் அடிப்பார் கோல்
எடுப்ப - உழவு எருதுகளை ஓட்டுகின்ற உழவர்கள் தங்
கைகளிலுள்ள தாற்றுக்கோலை ஓச்சுதலால், இன்தேன்
தொடைபீறி-(பக்கத்திலிருக்கின்ற
மரங்கிளையில் உள்ள) இனிமையானதேன்இறால்
கிழிபட்டுத் தேன் ஒழுகுகின்ற, கார் அடுத்த சோலை
கடல்நாடன் - மேகங்கள் தங்குகின்ற சோலைகள்
சூழ்ந்த கடற்கரை நாடனாகிய இருதுபன்னன்,
தேர்த்தொழிலின் மிக்கானை தேர்ந்து -
தேரோட்டுந்தொழிலிற் சிறந்த வாகுகனாகிய நளனை
நன்கு மதித்து, தேர் அடுத்த மா தொழிலும் - தேரிற்
பூட்டிய குதிரைகளை ஓட்டுகின்ற தொழில் முறையையும்,
இத்தொழிலும் மாற்றுதியோ என்று உரைத்தான் -
இம்மரத்தில் காயெண்ணுகின்ற இத்தொழிலையும்
மாற்றிக்கொள்வாயோ என்று கேட்டான். (அஃதாவது
இருவரும் அவ்வத்தொழிலைக் கற்றுக்கொள்வோம்
என்றபடி.)
(க - து.)இருதுபன்னன் நளனை நோக்கி,
‘தேர்க் குதிரைகளை விரைவாக ஓட்டுகின்ற உன்
தொழிலையும் காய்களை எண்ணிக்கணக்கிடும் என்
தொழிலையும் மாற்றிக் கொள்வாயா?’ என்று
கேட்டான்.
(வி - ரை.) ஏர் - ஏருக்குரிய
எருதுக்காதலால் ஆகுபெயர். கோல் - தாற்றுக்கோல்.
எடுப்ப - ஓச்சு. தொடை - தேனிறால். கார் - மேகம்.
நிலவளத்தால் சோலைகள் மேகமண்டலம் வரை
வளர்ந்திருத்தலைக் குறித்தது. கடல் - கடற்கரை.
தேரடுத்தமா - தேரிற் பூட்டிய குதிரை. இத்தொழில்
என்னும் அண்மைச் சுட்டு, எண்ணிக்கணக்கிடுதலை
உணர்த்திற்று. மாற்றுதி: முன்னிலை ஏவல் ஒருமை.
இருதுபன்னன் வாகுகனை நோக்கி அவன்
தேர்த்தொழிலுக்கு வியந்து, நீ
எனக்கு இத்தேரோட்டுகின்ற தொழிலைக்
கற்றுக்கொடு ; நான் உனக்கு இக்கணக்கு முறையைக்
கற்றுக்கொடுக்கின்றேன். இருவரும்
இத்தொழில்களிற் பயிற்சி பெற்றவராக
விளங்குவோம் என்பது குறிப்பு. மாத்
தொழில்-குதிரைகளின் மனநிலை தெரிந்து அவைகளைத்
தேர்ந்து தேரிற்பூட்டி ஓட்டுகின்ற அரிய வித்தை.
இத்தொழில் - இருதுபன்னன் தான்கற்ற கணக்கு
வித்தை. (47)
|