பக்கம் எண் :

484நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

கலி, நளனைவிட்டு நீங்குதல்

381. வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான்
தண்டார் புனைசந் திரன்சுவர்க்கி - கொண்டாடும்
பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன்பால் நின்ற கலி.

(இ - ள்.) (இருதுபன்னன் தன் வித்தையை நளனுக்குக் கற்றுக்கொடுத்தும், தான் அவன் வித்தையைக் கற்றும் முடிந்தபின்) காவலன்பால் நின்றகலி - நளமன்னனிடம் பொருந்தியிருந்த கலியென்னும் துன்பம், வண்டு ஆர் வளவயல் சூழ் - வண்டுகள் மொய்க்கின்ற நீர்வளம் மிக்க வயல்கள் சுற்றியிருக்கின்ற, மள்ளுவநாட்டு எம் கோமான் - மள்ளுவநாட்டை ஆட்சி புரிகின்ற எம் தலைவனான, தண்தார் புனை சந்திரன் சுவர்க்கி - குளிர்மை பொருந்திய மலர் மாலையணிந்த சந்திரன் சுவர்க்கியென்னும் அரசனால், கொண்டாடும் - பாராட்டப்படுகின்ற, பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்று - பாவாணனிடத்தில் நிலைத்திருந்த பசிகெட்டொழிந்தாற்போலத் தீர்ந்தது.

(க - து.)இருதுபன்னன் தன் வித்தையைக் கற்றுக் கொடுத்தும், தான் அவன் வித்தையைக் கற்றும் முடிந்த பின், நளமன்னன்பால் நின்ற கலித்துன்பம் விலகி நின்றது என்பதாம்.

(வி - ரை.) வண்டு ஆர் வளவயல் என்றது, நாட்டு வளங்கூறியவாறு. நாட்டுவளங் கூற அமைத்த தொடராயினும், வண்டுகள் போன்ற எந்த உயிரும் வாழ்வதற்கு நிலைக்களனான நாடு எனக் கொள்க. மள்ளுவநாடு - மள்ளுவதேசம். ஆசிரியர் புகழேந்தியாரைப் போற்றிப் பாதுகாத்த புரவலன் சந்திரன் சுவர்க்கி. அவன் பாராட்டப்படுகின்ற புலவர், பசி முதலியவான துன்பங்கள் நீங்கி வளம்பெற வீற்றிருப்பர். ஆதலால் அதுபோன்று, நளன் இருது பன்னன்பாற் கற்றவித்தை கண்டதும் கலி நீங்கிச் சென்றதைப் ‘பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே’ என்று உவமங்கொடுத்துக்கூறித் தமக்குச் செய்த நன்றியைப் பாராட்டுகின்றார். புனை : வினைத்தொகை. சுவர்க்கி கொண்டாடும் என்பது மூன்றாம் வேற்றுமைத்தொகையாக்கிப் பொருள் கூறப்பட்டது. சிலர் சந்திரன் சுவர்க்கியைக் கொண்டாடுகின்ற பாவலன் என இரண்டன் தொகையாகக்கொண்டு பொருள் விரிப்பர். அவ்வாறு பொருள் கூறுவது, விரும்பாத ஒருவன்பால் சென்று தன் குறையையெடுத்து கூறிப் பயன்பெறுதல் சிறப்பின்மையோடு